அமீரக செய்திகள்

அமீரகத்தில் நடைபெறும் ஐந்து வகையான ஆன்லைன் மோசடிகள்!! குடியிருப்பாளர்களை எச்சரித்த காவல்துறை அதிகாரிகள்…..

ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகாரிகள், ஆன்லைனில் பயனர்கள் எதிர்கொள்ளக்கூடிய பல்வேறு வகையான மோசடிகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி எச்சரித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் கற்பித்து வருகின்றனர்.

அதன்படி, அமீரக குடியிருப்பாளர்களை குறிவைத்து மோசடிக் கும்பல்கள் நடத்தும் பத்து வகையான ஆன்லைன் மோசடிகள் குறித்த பட்டியலையும் அமீரக காவல்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதுபற்றிய விபரங்களை இங்கே காணலாம்.

1. போலி உணவு மோசடிகள்:

போலியான உணவு வலைத்தளங்கள் மூலம் மோசடி கும்பல்கள் குறித்து வங்கிகள் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளனர். அதாவது, இணையதளங்கள் அல்லது சமூக ஊடக தளங்களில் போலி உணவு சலுகைகளை விளம்பரம் செய்து, சலுகையைப் பெற லிங்க்கை கிளிக் செய்யும்படி கேட்கிறார்கள்.

நீங்கள் அவ்வாறு லிங்க்கை கிளிக் செய்தால், உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கித் தகவலை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள், அதன் பிறகு உங்கள் மொபைலுக்கு OTP அனுப்பப்படும். இவ்வாறு உங்களின் தனிப்பட்ட தகவலை வழங்கும்போது, மோசடி செய்பவர்கள் மோசடியான பரிவர்த்தனைகளுக்கு உங்கள் தரவுகளைப் பயன்படுத்தலாம்.

இதுபோன்ற போலி வலைத்தளங்களைப் பற்றி அபுதாபி காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்கு சில தந்திரங்களைப் பயன்படுத்துவதைக் கவனித்ததாகவும் கூறியுள்ளது.

2. போலி ஷாப்பிங் தளங்கள்:

போலி ஷாப்பிங் தளங்களைப் பொறுத்தவரை, பொருட்கள் மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக அபுதாபி நீதித்துறை (Abu Dhabi Judicial Department -ADJD) தெரிவித்துள்ளது. இதில் பணம் செலுத்துதல் வங்கி பரிமாற்றங்கள் அல்லது கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் மோசடி செய்யப்படுகிறது. பயனர்கள் பணம் செலுத்திய பிறகு, இந்த தளங்கள் காணாமல் போய்விடும் என்று ADJD கூறுகிறது.

3. போலி பரிசுத் தொகை:

நீங்கள் பரிசுத் தொகையை வென்றதாக போலி செய்திகளை உங்களுக்கு அனுப்பி, பரிசைப் பெற லிங்கை கிளிக் செய்யுமாறு கேட்கப்படும். நீங்கள் அத்தகைய இணைப்புகளை கிளிக் செய்யாமல் இருப்பது மிகவும் முக்கியம்.

4. செல்லப்பிராணிகள் விற்பனை:

வெளிநாடுகளில் இருந்து கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீட்டுச் செலவுகளை ஏற்றுக்கொள்வதற்காக செல்லப்பிராணிகளை விற்பனைக்கு அல்லது தத்தெடுப்பிற்கு வழங்கும் போலி ஆன்லைன் விளம்பரங்களைக் கையாள வேண்டாம் என்று அபுதாபி காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவை வாங்குதல் மற்றும் விற்பனை ஆப்களில் விளம்பரப்படுத்தப்படுகின்றன, இதில் பயனர்களை திருட்டு மற்றும் மோசடி நோக்கத்திற்காக திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்புமாறு கேட்கப்படுகிறது அல்லது உள்ளூர் மற்றும் சர்வதேச பரிவர்த்தனை நிறுவனங்கள் மூலம் பணத்தை மாற்றுமாறு கோரப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5. போலி வேலை வாய்ப்புகள்:

உண்மையான நிறுவனங்களின் வலைதளங்கள் மற்றும் லோகோவைப் போலவே போலியாக உருவாக்கி வேலைகளுக்கு கட்டணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்கிறார்கள். இவ்வாறு மக்களை ஏமாற்றும் நிகழ்வுகள் நடைபெறுவதால், போலியான வேலை விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று அபுதாபி காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது.

மேற்கூறியவாறு, ஒரு இணையதளம் அல்லது செய்தி மோசடியானது என்பதை எப்படி அறிவது?

ஆன்லைனில் நீங்கள் பாதுகாப்பாக இருக்க பின்வரும் சில குறிப்புகளை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

1. உங்களுக்கு செய்திகளை அனுப்பிய மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்த்து, பின்னர் லிங்க்கை கிளிக் செய்வதற்கு முன் சரிபார்க்கவும். ஒரு பாதுகாப்பான லிங்க் “https://www” உடன் தொடங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2. எந்த சூழலிலும், உங்களது தனிப்பட்ட தகவலை உள்ளிட வேண்டாம் மற்றும் உங்களை யார் தொடர்பு கொள்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

3. அதுபோல, ATM அல்லது கிரெடிட் கார்டு எண், காலாவதி தேதி, CCV குறியீடு அல்லது OTP போன்ற விவரங்களை யாருக்கும் கொடுக்க வேண்டாம்.

4. ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது, கடையின் நம்பகத்தன்மை மற்றும் உரிமையை சரிபார்க்கவும்.

5. வழக்கத்திற்கு மாறான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவிக்கும் கடைகளை சரிபார்க்கவும்.

6. தெரியாத கணக்குகளுக்கு எந்த வங்கி பணப் பரிமாற்றமும் செய்யாமல் கவனமாக இருங்கள் மற்றும் Whatsapp அல்லது சமூக ஊடக தளங்களில் அனுப்பப்படும் எந்த இ-பேமன்ட் லிங்க்களையும் கையாள வேண்டாம்.

7. குற்றங்களை உடனடியாகப் புகாரளித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.

8. அறிமுகமில்லாத அல்லது சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் முகவரிகள், சமூக ஊடக கணக்குகள் அல்லது இணையதளங்களில் இருந்து வரும் கோரப்படாத சலுகைகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

9. புகழ்பெற்ற உணவு நிறுவனங்கள் அல்லது டெலிவரி சேவைகளின் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்த, அவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சேனல்களைப் பார்க்கவும்.

10. அவ்வாறு உங்களால் சலுகையின் உண்மைத் தன்மையை சரிபார்க்க முடியாவிட்டால், தனிப்பட்ட தகவல், வங்கி விவரங்கள் அல்லது எந்த முக்கியத் தரவையும் பகிர்வதைத் தவிர்க்கவும்.

11. OTPயைப் பெறும்போது, ​​SMS ல் கொள்முதல் தொகை மற்றும் வணிகரின் பெயரைச் சரிபார்க்க மறக்காதீர்கள்.

மோசடி குறித்து புகாரளிக்க வழிகள்:

  • eCrime இணையதளம் – ecrime.ae
  • அபுதாபி காவல்துறையின் அமன் சேவை (Aman service) – 800 2626க்கு அழைக்கவும்
  • சைபர் கிரைம்களை உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகாரளிக்கலாம் அல்லது உதவிக்கு 999ஐ அழைக்கலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!