அமீரக செய்திகள்

துபாயில் 14 திர்ஹம் ஆஃபருக்கு ஆசைப்பட்டு 14,000 திர்ஹம்களை இழந்த குடியிருப்பாளர்.. இழந்த பணத்திற்கு வங்கி பொறுப்பாகுமா?

துபாயில் வசிக்கும் ராகுல் கில்லாரே என்பவர், போலியான துரித உணவு இணையதளத்தில் (fast-food website) 14 திர்ஹம் மதிப்புள்ள ஒரு உணவை ஆர்டர் செய்து, 14,000 திர்ஹம்களை பறிகொடுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சுமார் 13 ஆண்டுகளாக துபாயில் வசிக்கும் ராகுல், அவருக்கு தேவையான மளிகைப் பொருட்களை இ-காமர்ஸ் தளங்களிலும், உணவுகளை ஆன்லைன் டெலிவரி தளங்களிலும் ஆர்டர் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று சமூக ஊடகத்தளத்தில் ​​பிரபலமான ஒரு துரித உணவு இணையதளத்தைப் போன்ற ஒரு விளம்பரத்தைப் பார்த்துள்ளார். அதில் 14 திர்ஹம்களில் ஒரு காம்போ உணவை பெறலாம் என்ற கவர்ச்சிகரமான சலுகையைக் கண்டுள்ளார். அப்போது சற்றும் யோசிக்காமல் உடனடியாக அந்த லிங்க்கைக் கிளிக் செய்து, கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளிட்டு உணவை ஆர்டர் செய்திருக்கிறார்.

அதனையடுத்து, அவர் ஆர்டர் செய்த உணவானது விரைவாக அவருக்கு டெலிவரியும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவரது மொபைலுக்கு வந்த செய்தியில் உணவுக்கு 14,000 திர்ஹம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டு ராகுல் அதிர்ச்சியடைந்துள்ளார். இவ்வாறு ஒரு போலியான விளம்பரத்தைக் கண்டு, ஆசைப்பட்டு லிங்க்கைக் கிளிக் செய்ததற்காக 14,000 திர்ஹம்களை இழந்து விட்டதாக ராகுல் தெரிவித்துள்ளார்.

எப்படி மோசடி நடந்தது?

மோசடியால் பாதிக்கப்பட்ட ராகுல் இது பற்றி விவரித்த போது, சமூக ஊடகத்தில் 14 திர்ஹம்களுக்கு உணவு கிடைப்பதாகக் குறிப்பிடப்பட்ட விளம்பரத்தைப் பார்த்ததும், கிளிக் செய்ததாகவும், பின்னர் கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளிட்டு ஆர்டரைச் செயல்படுத்த முயற்சித்த போது, அது வேலை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

அதேசமயம், அவரது வங்கிக் கணக்கில் இருந்து 14,000 திர்ஹம் கழிக்கப்பட்டதாக அறிவிப்பு வந்ததாகவும், OTP வழங்கும்படி அவரிடம் கேட்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராகுல், வங்கியிடம் புகாரளிப்பதற்கு முன்பே அவரது கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விட்டதாகவும் விவரித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வங்கியிடம் அவர் முறையிட்ட போது, வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த தவறுகளால் பணத்தை இழந்தால் அதற்கு வங்கிகள் பொறுப்பாகாது என்பதை மேற்கோள்காட்டி ராகுலின் வங்கியும் பணத்தைத் திருப்பித் தர மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தில் இது போன்ற சமூக ஊடக மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், தனிப்பட்ட மற்றும் நிதி விவரங்களை உள்ளிடுவதற்கு முன்பு இருமுறை சரிபார்க்குமாறும் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க, உத்தியோகபூர்வ சேனல்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடக கணக்குகள் மற்றும் இணையதளங்களில் இருந்து வரும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, அமீரகத்தில் உள்ள வங்கிகளும் மோசடிகளைத் தவிர்க்க எடுக்க வேண்டிய பாதுகாப்பான நடவடிக்கைகள் குறித்து நினைவூட்டுவதற்காக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு செய்திகளையும் மின்னஞ்சல்களையும் தவறாமல் அனுப்பியும் வருகின்றன. இருப்பினும் ஆஃபருக்கு ஆசைப்பட்டு அவ்வப்போது இது போன்ற மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்கும் சம்பவமும் அமீரகத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 

 

Related Articles

Back to top button
error: Content is protected !!