அமீரக செய்திகள்

தாயகம் திரும்ப முடியாமல் அமீரகத்தில் சிக்கித் தவித்த பெண் தொழிலாளர்கள்..!! சொந்த ஊர் செல்ல உதவிய விமான நிறுவனம்….

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலையின்றி சிக்கித் தவிக்கும் 40க்கும் மேற்பட்ட இலங்கைப் பெண் தொழிலாளர்கள், மீண்டும் அவர்களின் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர். அந்த வெளிநாட்டவர்களுக்கு விமான கட்டணம் ஒரு பெரிய சவாலாக இருந்த நிலையில், துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகமும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸும் இணைந்து பயணிகளுக்கு விமான டிக்கெட்டுகள் மற்றும் பயண ஆவணங்களை தயார் செய்து கொடுத்து உதவியுள்ளன.

இது தொடர்பாக வெளியான தகவல்களின் படி, இலங்கையிலிருந்து வந்த பெண் தொழிலாளர்கள் அனைவரும் வெவ்வேறு காரணங்களுக்காக அமீரகத்திற்குள் நுழைந்து பின்னர் வேலையின்றி திண்டாடியது தெரிய வந்துள்ளது.

அவர்களில் சிலர் விசிட் விசாவில் அமீரகத்திற்கு வந்து, வேலைத் தேடி அலைந்துள்ளனர், ஆனால் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. மேலும், அவர்களின் விசா தேதியும் காலாவதியானது. மற்ற சிலர் வேலைவாய்ப்பு விசாவில் வந்திருந்தாலும், அவர்களின் விசாக்களும் காலாவதியாகியுள்ளன. இருப்பினும், அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பவில்லை.

இந்நிலையில், அமீரகத்திலிருந்து தாய் நாட்டிற்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த பெண் தொழிலாளர்கள் குழுவாக துபாயில் இருந்து கொழும்புக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் முதல் குழு கடந்த மாதம் இலங்கைக்கு திரும்பியது என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் துணைத் தூதரக அதிகாரி அலெக்சி குணசேகரா என்பவர் பேசுகையில், தாய்நாட்டிற்குத் திரும்புவதற்கு அவர்களுக்கு விமானக் கட்டணம் ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்த நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்வந்து, அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப உதவியதாகவும் இதனால் அந்நிறுவனத்தின்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இலங்கையின் விமான நிறுவனம் அதன் சமூகப் பொறுப்பைக் காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரைப்போலவே, விமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பில் குழு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் அமீரகத்தின் பகுதி மேலாளர் ஷிரான் கிரெட்ஸர் என்பவர் பேசிய போது, துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துடன் ஒருங்கிணைந்து சக இலங்கையர்களை அவர்களின் அன்புக்குரியவர்களுடன் மீண்டும் சேர்ப்பதற்கு பாதுகாப்பான மற்றும் மிகவும் மலிவு வழியை வழங்கியதற்காக பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார்.

அமீரகத்தில் உள்ள 9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையில் 3.17 சதவீதம் இலங்கை வெளிநாட்டவர்கள் உள்ளனர். அதாவது, 0.32 மில்லியன் பேர் வசிக்கின்றனர். அமீரகத்தில் உள்ள முதல் 10 வெளிநாட்டவர்களில் இலங்கையர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!