அமீரக செய்திகள்

விற்பனைக்கு தயாராகவுள்ள புத்தம் புதிய iPhone 15 மாடல்கள்..!! பழைய மாடல்களின் விலை குறையுமா..??

பிரபல ஆப்பிள் நிறுவனம் அதன் அடுத்த ஐபோன் மாடலை எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று வெளியிடத் தயாராகி வருகிறது. வெகுவிரைவில் புதிய iPhone 15 சீரிஸ் சந்தைக்கு வரவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து, ஏராளமான ஐஃபோன் ஆர்வலர்கள் லேட்டஸ்ட் மாடலின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் புதிய மாடல்களை வெளியிடுவதற்கு முன்னதாகவே ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏராளமான ஐஃபோன் மோகம் கொண்ட வாடிக்கையாளர்கள், தங்களிடம் தற்போதுள்ள ஆப்பிள் ஃபோன்களை மறுவிற்பனை செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

இது குறித்து தேராவில் உள்ள ‘Phone Line’ ஸ்டோரின் மேலாளர் மொய்தீன் முஸ்தபா என்பவர் விவரிக்கையில், வாடிக்கையாளர்கள் iPhone 15 ஸ்மார்ட் போன்களை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும், பலர் தங்கள் பழைய மாடல்களை மறுவிற்பனை செய்த தயாராக இருப்பதாகவும் மற்றும் சிலர் லேட்டஸ்ட் மாடல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தங்கள் சாதனங்களை அப்கிரேட் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐபோன் 15 அறிமுகம்:

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் புதிய மாடல் ஐஃபோன்களை அறிமுகப்படுத்த ‘Wonderlust’ என்ற பிரம்மாண்ட நிகழ்வை செப்டம்பர் 12 ஆம் தேதி நடத்தியுள்ளது. இந்த லேட்டஸ்ட் ஐபோன் 15 மாடலில் ஆப்பிள் பிரியர்களுக்காகவே அப்டேட் செய்யப்பட்ட ஹார்டுவேர் மற்றும் டிஸ்ப்ளே, புதிய சார்ஜிங் போர்ட்கள், டைட்டானியம் கேஸ்கள் மற்றும் கேமராக்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதுவரவில் உள்ள சிறப்பம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

புதிய ஐபோன் 15இன் சிறப்பம்சங்கள் என்ன?

முதல்முறையாக ஆப்பிள் இண்டஸ்ட்ரியில் வண்ணங்கள் நிறைந்த பேக் கிளாஸ், உறுதியான மேட் ஃபினிஷ் மற்றும் அலுமினிய உறையுடன் சற்று வளைந்த விளிம்புகள் இதில் உள்ளன. iPhone 15 மற்றும் iPhone 15 Plus ஆகியவை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப இளஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு போன்ற வண்ணங்களில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இவற்றில் 48MP பிரதான கேமரா, க்வாட்-பிக்சல் சென்சார் (quad pixel sensor) மற்றும் வேகமான ஆட்டோஃபோகஸுக்கு 100 சதவிகித ஃபோகஸ் பிக்சல்ஸ் என பல சிறப்பம்சங்கள் உள்ளன.

USB-C சார்ஜிங் கேபிள்கள் iPhone 15 மற்றும் அதன் AirPods Pro சாதனங்களின் சார்ஜிங் கேஸ் ஆகிய இரண்டிற்கும் வருகின்றன.

128GB, 256GB மற்றும் 512GB சேமிப்புத் திறன்களில் கிடைக்கும் புதிய மாடல்களின் விலைகள் முறையே 3,399 திர்ஹம் மற்றும் 3,799 திர்ஹம்களில் தொடங்குகிறது. மேலும், இவை ஏரோஸ்பேஸ்-கிரேட் டைட்டானியம் டிசைன் கொண்ட முதல் ஐஃபோன்களாகும்.

அதுபோல, ஐபோன் Pro மற்றும் ஐபோன் Pro Max ஆகியவை நீலம், வெள்ளை மற்றும் கருப்பு டைட்டானியத்தில் 128GB, 256GB, 512GB மற்றும் 1TB சேமிப்புத் திறன்களில் கிடைக்கும், இவற்றின் விலைகள் முறையே 4,299 திர்ஹம் மற்றும் 5,099 திர்ஹம்ஸில் தொடங்குகிறது.

குறிப்பாக, ஐபோன் 15 Pro Max சீரிஸ் புதிய A-17 புரோ-சிப்பைக் கொண்டிருக்கும், இந்த சிப் மொபைல் கேம்களை உருவாக்கும் சிறந்த கிராபிக்ஸ் செயல்திறனை வழங்கும் மற்றும் அதிவேகமாக உணரச் செய்யும்.

ஆர்வமாக முன்பதிவு செய்யும் ஐபோன் பிரியர்கள்:

தங்கள் வழக்கமான வாடிக்கையாளர்கள் புதிய மாடல் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே முன்பதிவு செய்துள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அமீரகத்தில் புத்தம் புதிய ஐஃபோனுக்கான முன்கூட்டிய ஆர்டர் அமீரக நேரப்படி செப்டம்பர் 15 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கும் என்றும், செப்டம்பர் 22 வெள்ளிக்கிழமை முதல் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுசு வந்தாலும் பழைய மாடலுக்கு டிமாண்ட் அதிகம்:

ஒருபக்கம் ஆப்பிள் அறிமுகப்படுத்திய புத்தம் புதிய ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 ப்ளஸ் ஆகிய தயாரிப்புகளுக்கு அமோக வரவேற்பு இருந்து கொண்டிருக்கும்போதிலும், மறுபக்கம் பழைய மாடல்களான ஐபோன் 12, 13 மற்றும் 14 போன்றவற்றிலும் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ஏராளமானோர் இந்த பழைய மாடல்களை சமீபத்திய ஐபோனுக்கு மாற்றாக வாங்க விரும்புகின்றனர். குறிப்பாக ஐபோன் 15 குறைந்த சப்ளையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பழைய மாடல்களை மலிவு விலையில் வாங்குவதில் பலர் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

அதேபோல், புதுவரவு வந்த போதிலும் பழைய ஐபோன் மாடல்களின் விலை இன்னும் குறையவில்லை, மேலும் இந்த போக்கு அடுத்த சில வாரங்களுக்கு தொடரும் என்று எதிர்பார்ப்பதாக விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், பழைய ஐஃபோன் 13 Pro Max-ற்கு தற்போது அதிக தேவை உள்ளதாக அவர் கூறியுள்ளார். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 13 Pro Max, 256 GB மாடலை விரும்புவதாகவும், இதன் செகண்ட் ஹேன்ட் சாதனம் தற்போது 3,200 திர்ஹம் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் முதலில் 4,699 திர்ஹம் விலையில் வெளியிடப்பட்டது, இன்று வரை Pro Max மாடல் பல ஆண்டுகளாக அதன் மதிப்பை இழக்கவில்லை என்றும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!