துபாய் மத்திய சிறையில் வாடும் தந்தையை சந்திக்க விரும்பிய மகள்: பிறந்தநாளில் கைதியை ஆச்சரியப்படுத்திய அதிகாரிகள்…
துபாய் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தந்தையை அவரது மகள் ஆறு வருடங்களுக்குப் பிறகு நேரில் சந்தித்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. துபாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது தந்தையை சந்திக்க விருப்பம் தெரிவித்த பெண்ணுக்கு துபாய் காவல்துறை அவரின் தந்தையை சந்திப்பதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அந்த கைதியின் பிறந்தநாளில் இருவரையும் இணைக்க காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. சுமார் ஆறு வருடங்களுக்குப் பிறகு இருவரும் சந்தித்த அந்த தருணத்தில் தந்தையும் மகளும் கண்ணீர் மல்க இருவரும் கட்டித்தழுவிய புகைப்படங்களை காவல்துறையினர் பகிர்ந்துள்ளனர்.
அத்துடன் காவல்துறை அதிகாரிகள் அவரது பிறந்த நாளைக் கொண்டாடும்போது அவர்கள் ஒன்றாக பிறந்தநாள் கேக்கை வெட்டுவதையும் புகைப்படம் காட்டுகிறது.
இந்நிகழ்வு குறித்து தண்டனை மற்றும் சீர்திருத்த நிறுவனங்களின் பொதுத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் மர்வான் அப்துல்கரீம் ஜல்ஃபர் அவர்கள் கூறுகையில், சிறையில் இருக்கும் தந்தைக்கு தன் மகளின் வருகை பற்றி தெரியாது என்றும், அவரை ஆச்சரியப்படுத்தி அவரது பிறந்தநாளை கொண்டாட துபாய் மத்திய சிறை சிறப்பு ஏற்பாடுகளை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கைதியைப் பற்றி விவரிக்கையில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி தாயகத்திலிருந்து புறப்பட்டு அமீரகத்திற்கு வந்த அவர், சில நாட்களிலேயே நிதி சிக்கல்களில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார் என்று ஜல்பர் கூறியுள்ளார்.
இதுபோல, சட்ட வரம்புகளுக்குள் கைதிகளின் அன்புக்குரியவர்களிடமிருந்து சந்திப்புக் கோரிக்கைகளைப் பெறுவதற்கு காவல்துறை தயாராக உள்ளது என்றும் பிரிகேடியர் ஜல்பர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கைகள் கைதிகளின் மன நலனில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் மறுவாழ்வு, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சிறந்த தேர்வுகளை செய்ய அவர்களை ஊக்குவிகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று கடந்த ஜூலை மாதத்தில், எப்போதும் தனிமையில் இருக்கும் ஒரு கைதி தனது மகனின் படங்களை வரைவதைக் கவனித்த துபாயின் சிறைத்துறை அதிகாரிகள், அந்த கைதியின் மகனை நேரடியாக வரவழைத்து, அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ள ஏறபாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.