அமீரக செய்திகள்

துபாயில் புதிய கலை வடிவமைப்புகளுடன் காட்சியளிக்கும் ரவுண்டானாக்கள்.. எமிரேட்டின் அழகியல் தோற்றத்தை மெருகேற்றும் பணியில் துபாய் முனிசிபாலிட்டி!!

துபாயில் சில பிரம்மிக்க வைக்கும் ரவுண்டானாக்கள் புது வடிவமைப்புகளுடன் மெருகேற்றப்பட்டுள்ளன. எமிரேட்டின் அழகியல் தோற்றத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சியின் ஒரு பகுதியாக, துபாய் முனிசிபாலிட்டி அல் ரக்கா, நாத் அல் ஷபா, நாத் அல் ஹமர் மற்றும் அல் கவானீஜ் ஆகிய ரவுண்டானாக்களை அழகுபடுத்தும் பணிகளை நிறைவு செய்துள்ளது.

துபாயை திறந்த, உலகளாவிய மற்றும் அணுகக்கூடிய கலை இடமாக மாற்றும் வகையில் ரவுண்டானாக்களில் அதிநவீன லைட் செட்டிங்க்ஸ், வண்ணங்கள் நிறைந்த பூக்கள், செடிகள் மற்றும் நீரூற்றுகள் என ஏராளமான அழகியல் கூறுகளால் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கலை வடிவமைப்புகள் மூலம் பொது இடங்களின் அழகியல் அம்சங்களை மேம்படுத்த முனிசிபாலிட்டி மேற்கொண்ட பல திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். ஏற்கனவே துபாய் முனிசிபாலிட்டியானது இந்த மாதத் தொடக்கத்தில், 3D லைட்டிங் அமைப்புகளுடன் இணைந்த அதிநவீன நீரூற்று, புதிய தளங்கள் மற்றும் தோட்டக்கலை போன்றவற்றால் துபாயின் வரலாற்றுச் சின்னமான தேரா க்ளாக் டவர் ரவுண்டானாவை மறுசீரமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரவுண்டானாக்களின் புதிய வடிவமைப்புகள்:

அல் வர்கா ரவுண்டானாவின் (Al Warqa Roundabout) புதிய வடிவமைப்பு, அப்பகுதிக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில் காட்சியளிக்கிறது. ரவுண்டானாவின் மையத்தில் அழகிய இலை போன்ற வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மைய அமைப்பு 3.5 மீட்டர் உயரத்தில் உள்ளது.

அதேபோல், நாத் அல் ஹமர் (Nad Al Hamar) ரவுண்டானாவின் வடிவமைப்பும் அப்பகுதியின் பெயருக்கு ஏற்றார் போல, அருகிலுள்ள சிவப்பு குன்றுகளை பிரதிபலிக்கும் ரோஜா இதழ்களை ஒத்திருக்கிறது. இது 1.9 முதல் 2.9 மீட்டர் வரை உயரம் கொண்டுள்ளது.

அடுத்ததாக நாத் அல் ஷபா (Nad Al Sheba) ரவுண்டானா, இங்குள்ள வடிவமைப்பு இப்பகுதியில் உள்ள உயரமான மண் மலைகளைக் குறிக்கிறது. ரவுண்டானாவின் உள்ளமைவு உயரம் 0.6 முதல் 2.0 மீட்டர் வரை மாறுபடும்.

இதற்கிடையில், 3 மீட்டர் உயரமுள்ள அல் கவானீஜ் ரவுண்டானா அல் கவானீஜ் எனப்படும் நன்னீர் கிணற்றுடன் தொடர்புடைய பகுதியின் பெயரைக் குறிக்கிறது. இது உள்ளூர் மக்களின் பாலைவன விவசாய பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட பண்ணையைக் காட்சிப்படுத்துகிறது மற்றும் அவர்களின் அத்தியாவசிய வர்த்தகம் மற்றும் கலாச்சார நடைமுறைகளை பிரதிபலிக்கிறது.

 

அதுமட்டுமின்றி, முனிசிபாலிட்டி துபாயில் உள்ள ரவுண்டானாக்கள் அனைத்திலும் பல்வேறு பருவகால பூக்கள் உட்பட பல்வேறு பூக்கள் மற்றும் புதர்களை நட்டு மெருகேற்றியுள்ளது.

கூடுதலாக, எமிரேட் முழுவதும் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகளில் மலர்களை நடுதல் மற்றும் ரவுண்டானக்களை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகளையும் முனிசிபாலிட்டி மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!