அமீரக செய்திகள்

UAE: சாலைகளில் திடீரென பாதையை மாற்றும் போது வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய விதிகள் என்னென்ன…??

நீங்கள் துபாயில் வாகனம் ஓட்டும்போது சாலையில் பாதையை மாற்ற விரும்பினால், சில அடிப்படை விதிகளை பின்பற்றியாக வேண்டும். அவ்வாறு விதிகளைக் கடைபிடிக்காமல் பொறுப்பற்ற முறையில் திடீரென பாதையை மாற்றும் வாகன ஓட்டிகளுக்கு அபராதத்துடன் பிளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படும் என்பது முக்கியமானதாகும்.

துபாய் காவல்துறை அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கில், சாலைகளில் பாதையை மாற்றும் போது வாகன ஓட்டிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளது.

இது குறித்து வெளியிட்ட வீடியோவில், ஆணையத்தின் போக்குவரத்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது ஓட்டுநர்களின் சொந்த மற்றும் சக சாலைப் பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் பாதைகளை பாதுகாப்பாக மாற்ற அனுமதிக்கிறது என்று துபாய் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

பாதையை மாற்றும் போது பின்பற்ற வேண்டிய விதிகள்:

  • பாதையை மாற்றும் முன் பாதை தெளிவாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
  • பாதைகளை மாற்றுவதற்கு முன் தெரிவுநிலையை (visibility) பராமரிக்கவும்
  • மற்றொரு பாதைக்கு மாறும் போது, வாகனத்தின் இன்டிகேட்டரை இயக்கவும்.
  • திடீரென வாகனத்தை திருப்பி பாதையை மாற்றாமல், படிப்படியாக பாதையை மாற்ற முயற்சியுங்கள்.
  • பாதைகளை மாற்றும்போது சீரான வேகத்தை கடைபிடிக்கவும்.

மேற்கூறிய விதிகள் தவிர, சில கூடுதல் குறிப்புகளையும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பகிர்ந்துள்ளது, அவற்றை இங்கே பார்க்கலாம்:

  1. பாதைகளை மாற்றுவதற்கு முன் கூட்டியே திட்டமிட வேண்டும்.
  2. உங்களுக்கு முன்னால், பின்னால் மற்றும் பக்கவாட்டில் செல்லும் வாகனங்களின் நிலையைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
  3. ஹெட் செக் செய்யுங்கள் – ஹெட் செக் என்றால் பின் பக்க ஜன்னல்கள் வழியாக வாகனங்களைப் பார்க்க உங்கள் தோளுக்கு மேல் பார்ப்பது என்று அர்த்தம். ஒரு வினாடிக்கு மேல் உங்கள் கண்களை சாலையில் இருந்து எடுக்காமல் இருப்பதும், தலையைத் திருப்பும்போது வாகனத்தைத் திருப்புவதும் அவசியம்.
  4. உங்களைப் போலவே, உங்களுக்கு முன்னாள் செல்லும் ஓட்டுநர் ஒரே நேரத்தில் பாதையை மாற்றுவதற்கு சிக்னல் கொடுக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இந்த சூழலில் முன்னால் செல்பவர் மற்றொரு பாதைக்கு மாறும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.

அபராதம் மற்றும் பிளாக் பாயிண்ட்கள்:

அமீரகத்தின் போக்குவரத்து சட்டத்தின் படி, சாலையில் திடீரென வாகனத்தை திருப்பினால் 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் நான்கு ப்ளாக் பாய்ன்ட்கள் விதிக்கப்படும். அதேசமயம், வாகனத்தின் திசையை மாற்றும்போது அல்லது திருப்பும் போது, இன்டிகேட்டரை இயக்கத் தவறினால், 400 திர்ஹம்கள் அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும், சாலைகளில் மற்றவர்களின் உயிருக்கு அல்லது சொந்த உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டும்போது 2000 திர்ஹம் அபராதம் மற்றும் 23 பிளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படுவதுடன் வாகனம் 60 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!