அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்றும் நாளையும் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும்..!! வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்கு சென்றால் 2000 திர்ஹம் வரை அபராதம்!!

அமீரகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று (திங்கள்கிழமை செப்டம்பர் 18) மற்றும் நாளை (செவ்வாய் கிழமை செப்டம்பர் 19) இடியுடன் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள சில உள்பகுதிகளை ஆலங்கட்டி மழை தாக்கலாம் என்று மையம் அறிவித்துள்ளது.

மேலும், சில சமயங்களில் தூசியுடன் கூடிய காற்று வீசும் என்பதால் சாலைகளில் தெரிவுநிலை குறையும் அபாயம் இருப்பதாக வாகன ஓட்டிகளை தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் (MoI) வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிவேகக் காற்று வீசுவதுடன் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, குடியிருப்பாளர்களுக்கான பின்வரும் ஆலோசனைக் குறிப்புகளையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது:

  • அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து வெளியிடப்படும் வானிலை அறிவிப்புகளை பின்பற்றுங்கள்.
  • சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்.
  • உங்கள் ஹெட்லைட்கள், விண்ட்ஷீல்ட் வைப்பர்ஸ் மற்றும் டயர்களின் நிலை சரியாக இருப்பதை உறுதிசெய்யுங்கள்.
  • சாலைகளில் நிதானமாகவும் கவனமாகவும் செல்லுங்கள்.
  • எப்பொழுதும்  அதிவேகத்தை தவிர்க்கவும்.
  • வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் இருந்து விலகியே இருங்கள்.

ஏற்கனவே, இந்தாண்டின் தொடக்கத்தில் வெள்ளம் சூழ்ந்த பள்ளத்தாக்குகள் அல்லது அணைகளுக்கு அருகில் மக்கள் கூடுவதையோ அல்லது நுழைவதையோ தடைசெய்யும் புதிய விதிகளை உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

எனவே, வாகன ஓட்டிகள் இந்த விதிகளை மீறினால் 2,000 திர்ஹம் வரை அபராதம் மற்றும் 23 பிளாக் பாயின்ட்கள் விதிக்கப்படுவதுடன், இரண்டு மாதங்களுக்கு அவர்கள் பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!