அமீரக செய்திகள்

அமீரகத்தில் மழைப்பொழிவை அதிகரிக்க புதிய முயற்சி… ஒரு மாத கால சோதனையை துவக்கும் அமீரக அரசு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் செயற்கையாக மழையை உருவாக்க ‘கிளவுட் சீடிங்’ எனப்படும் தொழில்நுட்பமானது பொதுவாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.  ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதி பாலைவனமாக சூழ்ந்து இருப்பதால், இந்த கிளவுட் சீடிங் தொழில்நுட்பத்தின் மூலம் வறட்சியான பகுதிகளில் செயற்கை முறையில் மழை பெய்ய வைத்து செழுமையாக மாற்றப்படும் முயற்சியை தொடர்ந்து கையாண்டு வருகின்றது.

இந்நிலையில் மழைப்பொழிவை மேம்படுத்த இந்த கிளவுட் சீடிங் முறையில் மேலும் கூடுதலான தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கு முயற்சி எடுக்கப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இதில் உள்ள நிறை மற்றும் குறைகளை ஆராய்வதற்காக ஒரு மாத காலத்திற்கு சோதித்து பார்க்க திட்டமிட்டுள்ளது. இதன்படி அல் அய்ன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தொடங்கும் ஒரு மாத சோதனையானது இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கின்றது என கூறப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியானது, தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (NCM), மழை விரிவாக்க அறிவியலுக்கான அமீரக ஆராய்ச்சி திட்டம் (UAEREP) மூலம் நடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பைலட்டுகள் கொண்ட தொழில் நுட்ப குழு கிளவுட் சீடிங் தொழில்நுட்பத்தை மின்சாரத்தின் உதவியுடன் மற்றும் மின்சாரம் இல்லாமல் செய்யப்படும் பொழுது கிடைக்கக்கூடிய முடிவுகள் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்து, இரண்டில் எந்த நடைமுறை சிறந்தது என்பதை ஆராய்ச்சியின் மூலம் தேர்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம், எதிர்கால சந்ததியினர் தண்ணீர் இல்லாமல் வாடும் நிலை ஏற்படாது என்றும், அமீரகம் முழுவதும் பசுமையின் தாயகமாக மாற்ற இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவி புரியும் என உலக வானிலை மைய நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்த ஒரு மாத ஆராய்ச்சியினை மேற்கொள்வதற்காக, இயற்பியல் ஆராய்ச்சி மற்றும் கருவிகளில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனமான ஸ்ட்ராட்டன் பார்க் இன்ஜினியரிங் கம்பெனி (SPEC) உடன் இணைந்து அல் ஐன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஆராய்ச்சியினை துவக்க உள்ளது. ஏற்கனவே, கிளவுட் சீடிங் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் அதனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற ஆராய்ச்சியில் SPEC அனுபவம் வாய்ந்தது என்பதால், தற்பொழுது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இதனுடன் கை கோர்த்துள்ளது.

NCM இன் கிளவுட்-சீடிங் விமானமான SPEC லியர்ஜெட்டில் நிறுவப்பட்ட மேம்பட்ட கருவிகள் மற்றும் சென்சார்களைப் பயன்படுத்தி தரவு சேகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆராய்ச்சி நன்முறையில் வெற்றி அடையும் பட்சத்தில், கிளவுட் சீடிங் தொழில்நுட்பத்தினை மேலும் திறம்பட செயல்படுத்தி அமீரகத்தை செழுமையாக மாற்ற மழைப்பொழிவை அதிகரிக்கச் செய்யும் என்ற நம்பிக்கையில் ஆராய்ச்சியானது துவக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!