அமீரக செய்திகள்

அமீரகத்தில் தொடங்கிய இலையுதிர்காலம்..!!! இனி வரும் நாட்களில் நீண்ட இரவு நேரம் மற்றும் குறுகிய பகல் நேரங்கள் இருக்கும் என NCM தகவல்…

ஐக்கிய அரபு அமீரகம் இலையுதிர்காலம் தொடங்கியுள்ளதால், இனி வரும் நாட்களில் பகல் நேரம் குறுகியதாகவும், இரவுகள் நீளமாகவும் இருக்கும் என்றும், இதைத் தொடர்ந்து வானிலை படிப்படியாக குளிர்ச்சியடையத் தொடங்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நாட்டில் இன்றைய வானிலை சீராகவும், சில நேரங்களில் ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது. அதேசமயம், இன்றிரவு முதல் நாளை (வெள்ளிக்கிழமை) காலை வரை ஈரப்பதமாக இருக்கும் என்றும், சில கடலோர மற்றும் உள் பகுதிகளில் மூடுபனி உருவாகக் கூடும் என்றும் NCM எச்சரித்துள்ளது.

NCM வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் லேசானது முதல் மிதமான காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அபுதாபி மற்றும் துபாயில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலைகள் முறையே 29 டிகிரி செல்சியஸ் மற்றும் 31 டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாகும் என்று மையம் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் அக்டோபர் 2 மற்றும் 3 ஆகிய இரண்டு தேதிகளில் அமீரகத்தில் பகல் மற்றும் இரவுகள் சமமாக இருக்கும் என்று வானியல் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். இந்த நிகழ்வு ‘September equinox’ என்று அழைக்கப்படுகிறது.

கோட்பாட்டின் படி, இந்நிகழ்வு செப்டம்பர் 23 அன்று நிகழும், ஆனால் இது இருப்பிடத்தைப் பொறுத்து, ‘September equinox’ நிகழ்வுக்கு  ஏழு முதல் 10 நாட்களுக்குப் பிறகு நடக்கும் என்று அபுதாபியை தளமாகக் கொண்ட சர்வதேச வானியல் மையத்தின் இயக்குனர் முகமது ஷவ்கத் ஓடே அவர்கள் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!