அமீரக செய்திகள்

அமீரகத்தில் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட இரண்டு மருத்துவ மையங்கள் அதிரடியாக மூடல்!! சுகாதராத் துறை வெளியிட்ட தகவல்…!!

அபுதாபியில் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக விதிமீறல்களில் ஈடுபட்ட இரண்டு சுகாதார மையங்கள் அபுதாபி சுகாதாரத்துறையினால் மூடப்பட்டுள்ளது. அபுதாபியில் இயங்கி வரும் ஒரு மெடிக்கல் சென்டர் மற்றும் அறுவை சிகிச்சை மையம் ஆகிய இரண்டு சுகாதார மையங்கள் விதிமீறல்கள் புரிந்ததன் காரணமாக தற்காலிகமாக மூடுவதற்கு அபுதாபி சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், சுகாதார தர ஆய்வுக் குழு நடத்திய சோதனை மற்றும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் மற்றும் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கூடவே, நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளையும் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மையங்களில் ஒன்றான மெடிக்கல் சென்டரில் மருத்துவ நடைமுறைகள், பரிசோதனைகள், நோயாளியின் பதிவேடுகளில் சிகிச்சை பதிவு மற்றும் ஆவணங்களில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவையனைத்தும் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்த மெடிக்கல் சென்டர் நோயாளியின் சிகிச்சைக்கான முறையான சம்மதத்தைப் பெறுதல், சிகிச்சைக்கு முன் அதனுடன் தொடர்புடைய முறைகள் மற்றும் அபாயங்களை விளக்குதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத மையத்தின் பெயரைப் பயன்படுத்துதல் போன்ற சுகாதாரத்துறை சார்ந்த கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை  கடைபிடிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின் படி, மீறல்கள் தொடர்பான விசாரணைகளின் முடிவுகள் நிலுவையில் உள்ள நிலையில், மெடிக்கல் சென்டரில் பணிபுரிந்து வரும் ஒரு மருத்துவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.

இதேபோல், பகல்நேர அறுவை சிகிச்சை மையமும் (day surgery centre) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இங்கு கதிர்வீச்சு பாதுகாப்பு தரநிலைகளை கடைபிடிக்காதது, ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான கதிர்வீச்சு பாதுகாப்பு உபகரணங்களை வழங்காதது மற்றும் மருத்துவ சாதனங்களை முறையாகப் பராமரிக்காதது போன்ற விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், சுகாதார இன்ஸ்பெக்டர்கள், தொற்று நோய் தடுப்பு தொடர்பான கூட்டாட்சி சட்டங்களை மீறுதல், ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடையே தொற்று நோய் வழக்குகளுக்கு இ-ரிப்போர்ட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்துவதற்கான துறைத் தலைவரின் உத்தரவைப் புறக்கணித்தல் மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு இணங்காதது போன்ற பல மீறல்களையும் அடையாளம் கண்டுள்ளனர்.

கூடுதலாக, முறையாக மருத்துவக் கழிவுகளை அகற்றுதல், கட்டிடம் மற்றும் முக்கிய அமைப்புகளைப் பராமரிப்பதற்கான கொள்கைகள் மற்றும் அபுதாபி குடிமைத் தற்காப்பு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தீ பாதுகாப்பு நடைமுறைகள் போன்றவற்றையும் இந்த வசதி பின்பற்றவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்நிகழ்வைத் தொடர்ந்து, எமிரேட்டில் உள்ள அனைத்து சுகாதார மையங்களும் சுகாதாரத் துறையின் தரநிலைகள் மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அபுதாபி சுகாதாரத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!