அமீரக செய்திகள்

துபாய் சாலையில் 280கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்து சீன் போட்ட பைக் ரைடர்.. 50,000 திர்ஹம்ஸ் அபராதம்.. பைக் பறிமுதல்.. துபாய் போலீஸ் அதிரடி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆபத்தான முறையிலும் பிறருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். இருந்தபோதிலும் அவ்வப்போது ஒரு சிலர் இந்த குற்றம் புரிந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் காவல்துறை ரோந்து வாகனத்திற்கு முன் ஸ்டண்ட் செய்த வாகன ஓட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் துபாயில் இளைஞர் ஒருவர் மோட்டார் பைக்கில் அதிவேகமாகச் செல்வது, ஒற்றைச் சக்கரத்தில் சாகசம் செய்வது என ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதால் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு 50,000 திர்ஹம் அபராதம் விதித்து, அவரிடமிருந்து  வாகனத்தை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் மணிக்கு 280 கிமீ வேகத்தில் சென்றதாகவும், சாலையில் ஆபத்தான ஸ்டண்ட்களை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல்,  பொறுப்பற்ற முறையில் சாலையில் சாகசம் செய்து கொண்டே அவர் பைக் ஓட்டும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது தொடர்பாக துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொதுத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் அவர்கள் கூறுகையில், வீடியோவில் தோன்றிய பைக் ரைடரை போக்குவரத்து ரோந்து உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ததாகக் குறிப்பிட்டார்.

பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் பலமுறை இதுபோன்ற செயல்களை செய்தது தெரிய வந்துள்ளது. இதன் விளைவாக, அவரது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டன என்று அல் மஸ்ரூய் தெரிவித்துள்ளார்.

இது போன்ற போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் கடுமையான விபத்துக்களில் சிக்கியுள்ளதாகவும், அதன் விளைவாக உயிரிழப்புகள் அல்லது கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் “Police Eye” என்ற சேவை மூலமாகவோ அல்லது 901 என்ற எண்ணில் “We Are All Police” சேவையை அழைப்பதன் மூலமாகவோ தீங்கு விளைவிக்கும் சம்பவங்களைப் புகாரளிக்குமாறு அமீரக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!