அமீரக செய்திகள்

துபாய் ஏர்போர்ட்டில் விரைவில் வரவிருக்கும் ஸ்மார்ட் லக்கேஜ் டிராலி மற்றும் ஸ்மார்ட் ஸ்கேனர்.. பயணிகளுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்கும் என்றும் தகவல்..!!

துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) வழியாக பயணிக்கும் பயணிகள் தங்களின் விமானத்தைத் தவறவிடாமல் தடையற்ற பயணத்தை அனுபவிப்பதற்கும், விமான நிலைய நடைமுறைகளை எளிதாக கடப்பதற்கும் ஏற்றவாறு புதிய ஸ்மார்ட் லக்கேஜ் டிராலிகளை (smart luggage trolleys) அறிமுகம் செய்ய துபாய் ஆயத்தமாகி வருகிறது.

அதேபோல், விமான நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு உதவும் வகையில், பயணிகள் கொண்டுவரும் லக்கேஜ்ஜில் உள்ள தீங்கு விளைவிக்கும் மற்றும் பாதிப்பில்லாத திரவங்களை 3D காட்சியுடன் வேறுபடுத்திக் காட்டக் கூடிய புதிய ஸ்மார்ட் ஸ்கேனர் (smart scanners) தொழில்நுட்பத்திலும் துபாய் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த வாரம் துபாயில் நடைபெற்ற விமான நிலையம் மற்றும் துறைமுகங்களின் எதிர்காலக் கொள்கைகளை வடிவமைப்பதற்கான உலகளாவிய மாநாட்டில் பேசிய எமராடெக் (Emaratech) குழுமத்தின் CEO தானி அல்சாஃபின் என்பவர் இதனை அறிவித்துள்ளார்.

GDRFAஇன் மூத்த அதிகாரிகள், ஷெங்கன் (shenanigans) பிராந்தியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் அல்சாஃபின் பேசுகையில், இந்த ஸ்மார்ட் டிராலியானது கூகுள் போன்று அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், இதில் உள்ள நேவிகஷன் மூலம் பயணிகளை எந்த இடத்திற்கும் இந்த ஸ்மார்ட் டிராலிகள் அழைத்துச் செல்லும் என்றும், பயணிகள் எங்கு இருந்தாலும் அவர்கள் இடத்தை கண்டறிந்து அவர்கள் இடத்திற்கே வந்து அவர்களை எங்களால் அழைத்து செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் துபாய் விமான நிலையத்தின் வசதிகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் விமானத்தைத் தவறவிடாமல் இருக்க இது உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, ஸ்மார்ட் ஸ்கேனர்கள் பயணிகளின் இடையூறுகளை குறைக்கவும் மற்றும் அவர்களின் ஓட்டத்தை பல மடங்கு அதிகரிக்கவும் உதவும் என்றும் கூறியுள்ளார். மேலும், விமான நிலையத்தில் செக்-இன் செய்யும் போது இது அதிகாரிக்கு பொருட்களின் 3D காட்சியை வழங்கும் என்றும், இந்த தொழில்நுட்பம் தீங்கு விளைவிக்கும் மற்றும் பாதிப்பில்லாத திரவங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை அடையாளம் காட்டும் என்றும் அல்சாஃபின் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், இந்தத் தொழில்நுட்பத்திற்கான சான்றிதழைப் பெற தாங்கள் காத்திருப்பதாகவும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய முயற்சிப்பதாகவும் அல்சாஃபின் தெரிவித்துள்ளார். அவ்வாறு சான்றிதழைப் பெற்றதும், ஒரு மணி நேரத்தில் 450 பயணிகளை கையாள தங்கள் நிறுவனம் இலக்கு வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!