அமீரக செய்திகள்

துபாயில் நடந்த வினோத சம்பவம்.. Dh1 மில்லியனை திருடிய ஊழியர்கள்.. போலீஸுக்கு தகவல் கொடுத்தவரே திருடியது அம்பலம்..!!

துபாய் காவல்துறையினர் சமீபத்தில் 1 மில்லியன் திர்ஹம் ரொக்கத்தை திருடர்கள் திருடிச் சென்றதாக அளிக்கப்பட்ட புகாருக்கு பின்னால் இருந்த மர்மத்தை உடைத்து, குற்றவாளிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக செய்திகளில் வெளியான தகவல்களின் படி, துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் தனது பாதுகாப்பில் இருந்த 1 மில்லியன் திர்ஹம் ரொக்கத்தை திருடர்கள் எடுத்துச் சென்று விட்டதாக துபாய் போலீஸுக்கு புகார் அளித்துள்ளார்.

ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில், விசாரணை மற்றும் தடயவியல் குழுக்கள் (Investigative and forensic team) உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அங்கு சென்ற கேப்டன் ஹம்தான் அஹ்லி தலைமையிலான நிபுணர்கள் குழு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

காவல்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரில், நிறுவனத்தின் வளாகத்தின் பிரதான நுழைவாயிலில் இருந்து நுழைந்த திருடர்கள் அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கி பின்னர் பிளாஸ்டிக் கைவிலங்குகளால் அவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்ததாகவும், நான்காவது ஊழியர் நிறுவனத்தின் லாக்கரில் இருந்த பணத்தை எடுத்து கும்பலின் பைகளை நிரப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.

பின்னர், சம்பவ இடத்திலிருந்து திருட்டு கும்பல் தப்பித்துச் சென்றதும், நான்காவது ஊழியர் தனது சக ஊழியர்களை விடுவித்து துபாய் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கேப்டன் ஹம்தான் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவ்வாறு புகார் பற்றி கேப்டன் ஹம்தான் விவரித்த பிறகு, நிறுவனத்தின் நுழைவு வாயிலில் இருந்து விசாரணையைத் தொடங்கிய தடயவியல் குழுவினர், கதவில் ஷூ ஒன்றின் அச்சு பதிந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதைப் பகுப்பாய்வு செய்த நிபுணர்கள், கதவில் இருந்த ஷூ பிரிண்ட் காவல்துறைக்கு புகார் கொடுத்த நான்காவது ஊழியரின் ஷூ அச்சுடன் ஒத்துப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, திருட்டை ஒப்புக் கொண்ட அவர், தனது சக ஊழியர்களையும் இதில் பங்கேற்கச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், குற்றத்தைப் பற்றி காவல்துறையினருக்கு தெரிவிப்பதன் மூலம், சந்தேகத்தை திசை திருப்ப முயற்சித்ததையும் அவரே ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

 

Related Articles

Back to top button
error: Content is protected !!