அமீரக செய்திகள்

அமீரகம் முழுவதும் பெய்து வரும் கனமழை!! குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த பத்து நாட்களாகவே பலத்த மழை பெய்து வருவதால், பள்ளத்தாக்குகள் நிறைந்து சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றன. எனவே, அமீரகக் குடியிருப்பாளர்கள் மிகக் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இன்று (வியாழக்கிழமை, அக்டோபர் 26) அரேபிய வளைகுடாவை ஒட்டிய கரையோரப் பகுதிகள், துபாய், அபுதாபி, அல் தஃப்ரா, அல் அய்ன் மற்றும் ராஸ் அல் கைமா போன்ற பகுதிகளளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இவ்வாறு அமீரகம் முழுவதும் மோசமான வானிலை நிலவி வருவதால், அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா எமிரேட்களைச் சேர்ந்த அதிகாரிகள் குடியிருப்பாளர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

அபுதாபி காவல்துறை:

அபுதாபி காவல்துறை மழைக்காலங்களில் வேகத்தை குறைக்குமாறு ஓட்டுநர்களை வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, அபுதாபியில் உள்ள பல சாலைகளில் வேக வரம்பு மணிக்கு 80 கிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னெச்சரிக்கையாக குடியிருப்பாளர்களுக்கு மொபைல் போன்களில் சைரன் எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், சீரற்ற வானிலையின் போது ஏற்படும் இடையூறுகள் (மரங்கள் விழுதல், நீர் தேங்குதல், விழும் அல்லது சாய்ந்த மின்கம்பங்கள்) குறித்து தெரிவிக்க குடியிருப்பாளர்கள் 993 என்ற எண்ணில் அபுதாபி சிட்டி முனிசிபாலிட்டியை தொடர்பு கொள்ளலாம்.

துபாய் அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை:

துபாய் காவல்துறையின் பொது போக்குவரத்து துறையின் இயக்குனர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி அவர்கள் பேசிய போது, மழைநேரங்களில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றவும், வாகனம் ஓட்டும் போது புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்குமாறும் வாகன ஓட்டிகளை அறிவுறுத்தினார். குறிப்பாக, அவசர காலங்களில் தவிர, அபாய விளக்குகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

அதேபோல், கார் கண்ணாடிகளில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்கவும், ஜன்னல்களில் தேங்கும் மூடுபனியைப் போக்கவும், சாலையில் வாகனம் ஓட்டும் போது கண்ணாடி வைப்பர்களைப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.

இதற்கிடையில், துபாய் முனிசிபாலிட்டி அவசரநிலைக்கு உடனடியாக பதிலளிக்க ஒரு கள குழுவை ஏற்பாடு செய்துள்ளதாகவும், கனமழையை சமாளிக்க தயாராக உள்ளதாகவும் X தளத்தில் பதிவிட்டுள்ளது.

ஷார்ஜா காவல்துறை எச்சரிக்கை:

ஷார்ஜாவின் மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மிதமான முதல் கனமழை பெய்தது. இன்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், பார்வை குறைவாக இருந்தால், சாலையின் விளிம்பிற்கு சென்று நிறுத்தி விட வேண்டும் என்றும் ஷார்ஜா காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம், அமீரகக் குடியிருப்பாளர்கள் அணைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் வெள்ளப் பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ராஸ் அல் கைமாவில் எச்சரிக்கை:

எமிரேட்டில் வானிலை மாறிவருவதால், வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், போக்குவரத்து அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் RAK காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

NCM இன் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில்  நிலையற்ற வானிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாகவும், மிதமான முதல் பலத்த காற்று வீசக் கூடும் என்றும் மையம் கூறியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!