அமீரக செய்திகள்

உச்சம் தொடும் ‘UAE-இந்தியா’ விமான டிக்கெட்.. நிரந்தர தீர்விற்கு கூடுதல் விமானங்களை அனுமதிக்க இந்திய அரசுக்கு அமீரக விமான நிறுவனங்கள் வேண்டுகோள்..!!

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் இந்தியாவிற்கும், இந்தியர்கள் அதிகம் வசிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே விமான பயணத் தேவை அதிகளவு உயர்ந்திருப்பதால், இவ்விரு நாடுகளுக்கும் இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அமீரக விமான நிறுவனங்கள் கூறியுள்ளது.

இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதும், அமீரகத்தில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த சுமார் 3.5 மில்லியன் குடியிருப்பாளர்கள் விடுமுறை மற்றும் சீசன் காலங்களில் இந்தியாவிற்கு பயணிப்பதும், இரு நாடுகளுக்கும் இடையே விமானப் பயணத் தேவை அதிகரிக்க முக்கிய காரணங்கள் என அமீரகத்தின் விமான நிறுவன உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ்விரு நாடுகளுக்கு இடையே பறக்கும் விமானங்களில் அதிகபட்ச இருக்கைகளை வாரத்திற்கு 50,000 என்ற எண்ணிக்கையில் இருந்து வாரத்திற்கு 65,000 ஆக அதிகரிக்குமாறு இந்திய அரசிடம் அமீரக விமான நிறுவனங்கள் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் சில விமான போக்குவரத்து வட்டாரங்கள், ஐக்கிய அரபு அமீரகம் வாரத்திற்கு இந்தியாவிற்கு 65,000 இருக்கைகளில் இருந்து 115,000 ஆக அதிகரிக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளன.

சுற்றுலாப் பயணிகளிடையே அதிகரித்து வரும் தேவை காரணமாக துபாய் மற்றும் இந்தியா இடையே அதிக எண்ணிக்கையிலான விமானங்களை இயக்க அனுமதி கேட்டு இந்திய அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக துபாயை தளமாகக் கொண்ட சிறிய விமான நிறுவனமான ஃப்ளைதுபாயின் (flydubai) CEO கெய்த் அல் கெய்த் கூறியுள்ளார். மேலும், இந்த திறந்தவெளிக் கொள்கையை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், விமான போக்குவரத்தில் இந்தியா மிகப்பெரிய பங்களிப்பை வழங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமானப் பயண பற்றாக்குறையின் விளைவாக, பயணக் காலங்களில் விமானக் கட்டணங்கள் கணிசமாக உயர்வதால், அமீரகத்தில் பணிபுரியும் மற்றும் வசிக்கும் 3.5 மில்லியன் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் இரு நாடுகளுக்கு இடையேயான விமானக் கட்டணங்கள் உச்சத்தை எட்டியுள்ளதாகவும், கோடைகாலம் முடியும் வரை தற்போதைய நிலையிலேயே தொடர வாய்ப்புள்ளதாகவும் அல் கைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது கூற்றுப்படி, அதிக விமான நிறுவனங்கள் முன்வந்து புதிய விமானங்களை வாங்குவது, விமானப் போக்குவரத்துத் துறையை உயர்தும். அதேசமயம் இது அதிக விமானங்களை இயக்குவதற்கு அனுமதி வழங்க அரசாங்கத்தை ஊக்குவிக்கும். அவ்வாறு அனுமதி வழங்கினால், இந்தியாவில் உள்ள 40 இடங்களுக்கு flydubai தனது விமானங்களை இயக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையின் வலுவான பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தனது விமானப்படையை விரிவுபடுத்துவதற்காகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும் 80 பில்லியன் அமெரிக்க மதிப்பில் 470 புதிய விமானங்களை வாங்க ஆர்டர் செய்துள்ளது.

மேலும், ஏப்ரல் 29, 2023 அன்று தொடங்கும் புதிய விமானம் உட்பட டெல்லி மற்றும் துபாய் இடையே இரு வழிகளிலும் தினசரி 10 விமானங்களை இயக்க டாடாவுக்குச் சொந்தமான ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. அடுத்ததாக, மும்பை மற்றும் துபாய் இடையே தினசரி 6 விமானங்களை இயக்கிவரும் ஏர் இந்தியா, இனி வாரத்தின் பெரும்பாலான நாட்களில் இரண்டு இந்திய நகரங்களிலிருந்து துபாய்க்கு ஒரு நாளைக்கு 8 விமானங்களை இயக்கும் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் தலைவர் சர் டிம் கிளார்க் அவர்களும், அமீரகம் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பறக்கும் விமானங்களில் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதுபோல, சீசன் காலங்களில் ஏற்படும் கடுமையான விலை உயர்விலிருந்து புளூ-காலர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் விமானங்களை அதிகரிக்குமாறு டிராவல் நிறுவன உரிமையாளர்களும், இந்தியாவில் உள்ள விமான இயக்குநகர அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஏனெனில், கூடுதல் விமானங்களை இயக்க வெளிநாட்டு அல்லது இந்திய கேரியர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் ஒப்புதல் அவசியமாகும்.

மேலும் பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்திய வழித்தடங்களில் விமானங்களை இயக்க தயாராக உள்ளன, எனவே, தேவையை பூர்த்தி செய்ய இந்திய அரசாங்கம் முன்கூட்டியே பதிலளிக்க இதுவே சிறந்த நேரம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சமீபத்தில் சில விமான நிறுவனங்கள் சிறிய விமானங்களை அதிக விமான கட்டணத்தில் அனுப்பியது, குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களுக்கு பயணித்த பயணிகளுக்கு எதிர்மறை தாக்கத்தை வழங்கியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கூடுதல் விமானங்களை இயக்க இந்திய அரசு அனுமதி வழங்கினால், இந்தியாவிற்கு புதிய விமானங்களைத் தொடங்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாக அமீரக விமான நிறுவனங்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!