ADVERTISEMENT

ஓமானில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்புகள்..!! வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு 23% உயர்ந்துள்ளதாக தகவல்..!!

Published: 5 Oct 2023, 1:33 PM |
Updated: 5 Oct 2023, 2:03 PM |
Posted By: Menaka

ஓமானில் கடந்த 2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வேலை வாய்ப்புகள் 16.2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஓமன் சென்ட்ரல் பேங்க் (CBO) 2022 ஆம் ஆண்டிற்கான தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம், ஓமானி குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகள் முறையே 3.6 சதவீதம் மற்றும் 23.3 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பொதுத்துறையில் ஓமானிய ஊழியர்களின் எண்ணிக்கை 3.5 சதவீதமும், வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 5.8 சதவீதமும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த வளர்ச்சி தொற்றுநோய்க்குப் பிந்தைய காலகட்டத்தில் மீட்சியடைந்த பொருளாதாரத்தை பிரதிபலிப்பதாக அறிக்கையில் கூறப்படுகிறது. ஓமன் விஷன் 2040 என்ற திட்டத்தின்படி, ஓமானிய குடிமக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு ஓமன் அரசாங்கம் அதிக முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஓமானின் பொருளாதாரம்:

ஓமானின் பொருளாதாரமானது, எண்ணெய் மற்றும் எரிவாயு, நிதித்துறை, சுற்றுலா, கட்டுமானம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல துறைகளை நம்பியிருக்கிறது.

ADVERTISEMENT

ஓமானிய பொருளாதாரத்தில் எண்ணெய் துறை முக்கியப் பங்காற்றினாலும், மற்ற துறைகளும் அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்க உதவுவதாகவும், இதனால் பொருளாதார நடவடிக்கைகளை பல்வகைப்படுத்த ஓமான் அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தொற்றுநோய்க்கு பின்னர் பொருளாதார மீட்சி:

Covid-19 தொற்றுநோய் பரவலின் போது ஓமான் அரசாங்கம் தொலைதூர வேலைகளை (remote work) ஊக்குவித்ததன் மூலம், வேலைவாய்ப்பு நிலைமைகளில் எதிர்மறையான தாக்கத்தை கட்டுப்படுத்தியது.

அதேபோல், இளம் ஓமானிய நாட்டினரிடையே தொழில் முனைவோர் மற்றும் சுயவேலைவாய்ப்பை ஊக்குவிப்பதற்கும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs) ஊக்குவிப்பதற்கும் ஓமானில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) மிகவும் சாதகமான சூழலை உருவாக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ஓமானின் தனியார் துறையின் திறனைத் திறப்பதற்கான கொள்கைகள் மற்றும் முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, 2022ல் தனியார் துறையில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு 19.0 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.