அமீரக செய்திகள்

அபுதாபியில் சில குறிப்பிட்ட வாகனங்கள் செல்வதற்கு நாளை தடை: வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்த அபுதாபி காவல்துறை…

அபுதாபியில் நாளை அக்டோபர் 2ம் தேதியன்று தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் சில கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் நுழைவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்படுவதாக அபுதாபி காவல்துறை போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

அதில் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, அபுதாபி சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாட்டை (Abu Dhabi International Petroleum Exhibition and Conference-Adipec 2023) திறப்பதற்கு வழிவகுப்பதற்காக ஷேக் சையத் ப்ரிட்ஜ், ஷேக் கலீஃபா ப்ரிட்ஜ், முசாஃபா ப்ரிட்ஜ், அல் மக்தா ப்ரிட்ஜ் உள்ளிட்ட நுழைவாயில்களில் திங்கள்கிழமையன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை சில கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது., இது அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் (ADNEC) அக்டோபர் 5 வரை நடைபெறும்.

மேலும், இந்த தற்காலிக வாகனத் தடையிலிருந்து பொது சுகாதார நிறுவனங்கள் மற்றும் லாஜிஸ்டிக் ஆதரவு சேவைகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக அபுதாபி காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகத்தின் மத்திய செயல்பாட்டுத் துறையின் துணை இயக்குநர் ஜெனரல் மஹ்மூத் யூசுப் அல்-பலுஷி என்பவர் கூறுகையில், இந்தத் தற்காலிகத் தடையின் போது அனைத்து வழித்தடங்களிலும் போக்குவரத்து ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும், ஸ்மார்ட் போக்குவரத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகவே, அனைத்து வாகன ஓட்டிகளும் சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். Adipec 2023 கண்காட்சியில் 54 முக்கிய உள்ளூர் மற்றும் சர்வதேச ஆற்றல் நிறுவனங்கள் உட்பட 2,200 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, இந்த நான்கு நாள் நிகழ்வு உலகளாவிய காலநிலை மற்றும் ஆற்றல் சவால்களை சமாளிக்கும், அத்துடன் ஆற்றல் மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை விரைவுபடுத்துவதற்கான டிகார்பனைசேஷன் முயற்சிகளை எதிர்கொள்ளும் என்றும் கூறியுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!