அமீரக செய்திகள்

UAE: காப்பீடு திட்டத்தில் பதிவு செய்வதற்காக பல மணி நேரங்களாக வரிசையில் காத்திருந்தத ஊழியர்கள்!! கடைசி நாளில் குவிந்த கூட்டம்..!!

அமீரகத்தின் கட்டாய வேலை இழப்புக் காப்பீட்டு (ILOE) திட்டத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஏராளமான ஊழியர்கள் நேற்று (சனிக்கிழமை, செப்டம்பர் 30) எக்ஸ்சேஞ் மையங்களுக்கு வெளியே வரிசையில் நீண்ட நேரமாக காத்துக் கிடந்துள்ளனர்.

ஊழியர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வதற்காக அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகத்தால் (MoHRE) அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு சேனல்களில் அல் அன்சாரி எக்ஸ்சேஞ்ச் மையமும் ஒன்றாகும். ஷார்ஜாவின் ரோல்லா பகுதியில் உள்ள அல் அன்சாரி எக்ஸ்சேஞ்ச் ஹவுஸுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஊழியர்களின் புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதேபோன்ற நீண்ட வரிசைகள் அமீரகம் முழுவதும் உள்ள எக்ஸ்சேஞ்ச் மையங்களுக்கு வெளியே காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

MoHREயின் படி, அக்டோபர் 1 முதல் ILOE திட்டத்தில் பதிவு செய்யத் தவறியவர்கள் 400 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டும். இதற்கிடையில், சில குடியிருப்பாளர்கள் காலக்கெடு குறித்து தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர். எவ்வாறாயினும், காப்பீட்டுத் திட்டத்தில் குழு சேருவது முழுக்க முழுக்க ஊழியர்களின் பொறுப்பு, முதலாளிகளின் பொறுப்பு அல்ல என்று அதிகாரிகள் நினைவூட்டலை வழங்கியுள்ளனர்.

துபாயில் பணிபுரியும் பங்களாதேஷ் வெளிநாட்டவரான தவ்ஹீத் என்பவர், வேலை இழப்புக் காப்பீட்டிற்கான கட்டாயப் பதிவு பற்றி அறியாத பலரில் ஒருவராவார். காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்வது பற்றி அவர் கூறுகையில், சில நாட்களாக மக்கள் இதைப் பற்றி பேசுவதாகவும், இது எங்களுக்காக இல்லை என்று நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், கடைசிநாளில் தான் இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டதாகவும், இரவு 10 மணிக்கு பரிமாற்றம் நிறுத்தப்பட்டதால் அவரால் குழுசேர முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

ILOE திட்டத்தில் பதிவு செய்யாத ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள்

அபராதம்:

— MoHRE வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, காலக்கெடுவிற்கு முன் திட்டத்தில் பதிவு செய்யாத தகுதியுள்ள ஊழியர்களுக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

— அதேபோல், சந்தா செலுத்திய தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக பிரீமியம் செலுத்தாத ஊழியர்களிடமிருந்து 200 திர்ஹம் அபராதம் வசூலிக்கப்படும்.

— குறிப்பாக, இத்திட்டத்தின் காப்பீட்டுப் பலன்களை மற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் ஊழியர்கள் 20,000 திர்ஹம்கள் அபராதம் செலுத்த வேண்டும்.

புதிதாக பணி அனுமதி பெற முடியாது

ILOE காப்பீட்டுத் திட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து அபராதங்களையும் செலுத்தத் தவறிய ஊழியர்களால் அமீரகத்தில் புதிய பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கவோ அல்லது பெறவோ முடியாது.

சம்பளப் பிடித்தம்

முக்கியமாக இத் திட்டத்தில் பதிவு செய்யாத ஊழியர்கள்தான் அபராதம் மற்றும் தண்டனைகளை எதிர்கொள்வார்கள் என்பதனையும் இதனால் முதலாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதனையும் நினைவில் கொள்வது அவசியம். ஏனெனில், அமீரகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியரால் செலுத்தப்படாத அபராதங்கள் அந்த ஊழியர்களின் சம்பளம் அல்லது சேவையின் இறுதிப் பலன்களில் இருந்துதான் கழிக்கப்படும்.

விதிவிலக்குகள்:

இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு சில ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதில் முதலீட்டாளர்கள், வணிக உரிமையாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், ஓய்வூதியம் பெற்று புதிய முதலாளியுடன் சேர்ந்த ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் அடங்குவர்.

மேற்கூறப்பட்ட வகையினரைத் தவிர, அமீரகத்தில் உள்ள அனைத்து மத்திய மற்றும் தனியார் ஊழியர்களும் திட்டத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ILOE திட்டங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள்:

இந்த ILOE திட்டங்கள் இரண்டு வகைகளாக உள்ளன. ஒரு ஊழியர் மூன்று மாதங்கள் வரை இத்திட்டத்தின் நன்மைகளைப் பெறலாம்.

வகை A: அடிப்படை சம்பளம் 16,000 திர்ஹம் அல்லது அதற்கும் குறைவான சம்பளம் பெறும் ஊழியர்கள்

செலவு: மாதத்திற்கு VAT வரியுடன் 5 திர்ஹம் இழப்பீட்டு

நன்மை: அடிப்படை சம்பளத்தில் 60% என்ற அடிப்படையில் மாதம் 10,000 திர்ஹம் வரை இழப்பீடு வழங்கப்படும்.

வகை B: அடிப்படை சம்பளம் 16,000 திர்ஹம்களுக்கு மேல் ஈட்டும் ஊழியர்கள்

செலவு: மாதத்திற்கு VATயுடன் 10 திர்ஹம்

இழப்பீட்டு பலன்: அடிப்படை சம்பளத்தில் 60 என்ற கணக்கில் மாதம் 20,000 திர்ஹம் வரை இழப்பீடுப் பெறலாம்.

இதற்கிடையில், காப்பீட்டாளர் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே புதிய வேலையில் சேர்ந்து விட்டாலோ அல்லது நாட்டை விட்டு வெளியேறினாலோ வேலையின்மை காப்பீட்டு திட்டத்தின் நன்மைகள் நிறுத்தப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!