அமீரக செய்திகள்

அமீரகம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் ரேடார்கள் கண்டறியும் ஐந்து விதிமீறல்கள் என்னனு தெரியுமா?

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள ரேடார்கள், ஃபோன் பயன்படுத்திக் கொண்டே வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பிற விதிமீறலில் ஈடுபடுபவர்களை எவ்வாறு கண்டுபிடிக்கிறது என்பது குறித்த தகவல்களை அமீரக காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். நேற்று முன்தினம் (அக்டோபர் 6) கூட துபாய் காவல்துறையும் அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளில் இது பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

அமீரகத்தை பொறுத்தவரை சாலைகளில் நடக்கக்கூடிய பல்வேறு விதிமீறல்களைக் கண்டறிவதற்காக பொறுத்தப்பட்டுள்ள ரேடார்கள், காவல்துறையின் ஸ்மார்ட் கண்காணிப்பு அமைப்புகளுடன் (smart detection systems) இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஸ்மார்ட் ரேடார் அமைப்புகள் கண்டறியக் கூடிய ஐந்து விதிமீறல்கள் என்னென்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

1. வேகம்:

அமீரக சாலைகளில் வேக வரம்பை மீறி அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவது பொதுவான போக்குவரத்து மீறல்களில் ஒன்றாகும். எனவே, இதுபோன்ற விதிமீறல்களைக் கண்டுபிடிக்க UAE முழுவதும் ஸ்பீட் ரேடார்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை வாகனங்கள் நகரும் வேகத்தை பதிவு செய்கின்றன. மேலும், வாகனம் எவ்வளவு வேகமாக நகர்கிறது என்பதைப் பொறுத்து வாகன ஓட்டிகளுக்கு அபராதம் மற்றும் பிளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படுகின்றன.

வேகவரம்பு விதிமீறலும் தண்டனையும்:

  • அதிகபட்ச வேக வரம்பை விடவும் மணிக்கு 80 கி.மீக்கு மேல் தாண்டினால் (உதாரணமாக 100 கி.மீ சாலையில் 181 கி.மீக்கு மேல் சென்றால்) 3,000 திர்ஹம் அபராதமும் 23 பிளாக் பாயின்ட்களும் விதிக்கப்படுவதுடன் வாகனம் 60 நாட்கள் பறிமுதல் செய்யப்படும்.
  • அதிகபட்ச வேக வரம்பை விட மணிக்கு 60 கி.மீக்கு மிகாமல் சென்றால் 2,000 திர்ஹம் அபராதம் மற்றும் 12 பிளாக் பாயிண்டுகளைப் பெறுவார்கள். அத்துடன் அவர்களின் வாகனங்கள் 30 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும்.
  • அதிகபட்ச வேக வரம்பை விட மணிக்கு 50 கிமீக்கு மிகாமல் சென்றால் 1,500 திர்ஹம் அபராதம் மற்றும் 6  பிளாக் பாயிண்டுகளை எதிர்கொள்ள நேரிடும். அத்துடன் 15 நாட்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
  • அதிகபட்ச வேக வரம்பை விட மணிக்கு 40 கிமீக்கு மிகாமல் சென்றால் 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
  • அதிகபட்ச வேக வரம்பை விட மணிக்கு 30 கிமீக்கு மிகாமல் சென்றால் 700 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
  • அதிகபட்ச வேக வரம்பை விட மணிக்கு 20 கிமீக்கு மிகாமல் சென்றால் 600 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
  • அதிகபட்ச வேக வரம்பை விட மணிக்கு 10 கிமீக்கு மிகாமல் சென்றால் (உதாரணமாக 110 கி.மீக்குள்) 300 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

2. பாதுகாப்பான தூரம் கடைபிடிக்காதது:

சாலைகளில் முன்னால் செல்லும் வாகனத்தின் அருகே ஆபத்தான முறையில் வகனத்தை ஓட்டுவது டெயில்கேட்டிங் ஆகும். எனவே, உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்திற்கும் உங்கள் வாகனத்திற்கும் இடையே எப்போதும் பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்க வேண்டும்.

அவ்வாறு பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்கத் தவறும் வாகன ஓட்டிகளுக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். அதுவே அபுதாபி எமிரேட்டில் இந்த குற்றத்திற்கு வாகனமும் பறிமுதல் செய்யப்படும், மேலும் அதை விடுவிக்க 5,000 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

3. காலாவதியான பதிவு:

அபுதாபி சாலைகளில் உள்ள ரேடார் அமைப்புகள் காலாவதியான பதிவுகளைக் கொண்ட வாகனங்களைக் கண்டறிந்து வருகிறது. இது காரின் பதிவு செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்ய நம்பர் பிளேட்களை ஸ்கேன் செய்யும். காலாவதியான பதிவுகளுடன் பிடிபடும் வாகன ஓட்டிகளுக்கு 500 திர்ஹம் அபராதமும் நான்கு பிளாக் பாயின்ட்களும் விதிக்கப்படுவதுடன் அவர்களின் வாகனங்கள் ஏழு நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும்.

4. சீட் பெல்ட் அணியாதது:

அமீரகத்தில் வாகன ஓட்டிகள் சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகும். அவ்வாறு அணியவில்லை என்றால், அவர்கள் 400 திர்ஹம் அபராதம் மற்றும் நான்கு பிளாக் பாயிண்டுகளைப் பெறுவார்கள். துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள ஸ்மார்ட் ரேடார்கள், ஓட்டுநர் சீட் பெல்ட்டை அணியவில்லை என்பதைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

5. கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டுதல்:

வாகனம் ஓட்டும்போது கவனம் சாலையில் இருக்க வேண்டும். இல்லையெனில் சொந்த உயிர் மட்டுமின்றி சக சாலைப் பயனர்களின் உயிருக்கும் இது ஆபத்தை ஏற்படும். எனவே, வாகனம் ஓட்டுவதில் இருந்து உங்கள் கவனத்தை திசை திருப்பும் எந்தவொரு செயலும் கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டுவதாக கருதப்படும். இந்த விதிமீறலைக் கண்டறிவதற்கும் அமீரகத்தில் ஸ்மார்ட் ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மொபைலைப் பயன்படுத்திக் கொண்டே வாகனம் ஓட்டுதல்

  • அபராதம்: 800 திர்ஹம்
  • பிளாக் பாயிண்டுகள்: 4

வாகனம் ஓட்டும் போது எதிலும் கவனம் சிதறுதல்

  • அபராதம்: 800 திர்ஹம்
  • பிளாக் பாயிண்டுகள்: 4

திடீரென பாதையிலிருந்து விலகுதல்

  • அபராதம்: 1,000 திர்ஹம்
  • பிளாக் பாயிண்டுகள்: 4

உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!