அமீரக செய்திகள்

துபாயில் தீபாவளியை முன்னிட்டு பிரத்யேக சலுகை: 150,000 திர்ஹம்ஸ் நகை வவுச்சர்கள், குறிப்பிட்ட வைர ஆபரணங்களுக்கு 50% தள்ளுபடி..!!

இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு துபாயில் நகை வாங்கும் மக்களுக்காக புதிய பிரத்யேக பிரச்சாரம் துவங்கப்படவுள்ளது. இந்த பண்டிகை காலத்தில் தங்கம் மற்றும் நகைகளை வாங்கி பரிசளிப்பது வழக்கமாகும். இதன் காரணமாக நகை வாங்குபவர்களுக்கு என பிரத்யேக சலுகையும் ராஃபிள் டிராக்களும் நடத்தப்படவுள்ளது.

‘Glow with Gold this diwali’ எனும் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்கும் சில்லறை விற்பனை நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வைரம் மற்றும் முத்து நகைகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.  அத்துடன் சிலவற்றிற்கு பூஜ்ஜிய செய்கூலி கட்டணமும் வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வைரம், தங்கம் மற்றும் முத்து நகைகள் வாங்குவோருக்கு தங்க நாணயங்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சாரத்தில் நடத்தப்படும் ரேஃபிள் டிராவில் பங்கேற்பவர்கள் மொத்தம் 150,000 திர்ஹம்களை நகை வவுச்சர்களில் வெல்வார்கள் என்று வர்த்தக அமைப்பான துபாய் ஜூவல்லரி குரூப் (DJG) தெரிவித்துள்ளது.

அதாவது வாடிக்கையாளர்கள் 1,000 திர்ஹம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள நகைகளை வாங்குவதன் மூலம் இந்த ரேஃபிள் டிராவில் நுழையலாம் என கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 30 அதிர்ஷ்டசாலிகள் தலா 5,000 திர்ஹம் மதிப்புள்ள வவுச்சர்களைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவிக்கையில், “தங்கத்தின் நகரம் என்று அழைக்கப்படும் துபாய், ஷாப்பிங் செய்யும் இந்தியர்களுக்கான சிறந்த தீபாவளி ஷாப்பிங் இடமாகவும் உள்ளது. தீபாவளிக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், இந்த பிரச்சாரத்தில் பங்கேற்கும் விற்பனை நிலையங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று DJG உற்சாகமாக அறிவிக்கிறது” என்று வர்த்தக அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

துபாய் முழுவதும் 150 சில்லறை விற்பனை நிலையங்களுடன் சுமார் 75 நகை பிராண்டுகள் அக்டோபர் 28 முதல் நவம்பர் 16 வரை இந்த பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளன. DJG இன் வாரிய உறுப்பினரும், சந்தைப்படுத்தல் தலைவருமான லைலா சுஹைல் கூறியதாவது: “தீபாவளி என்பது மகத்தான மகிழ்ச்சி, விளக்குகள் மற்றும் ஒற்றுமையின் நேரம். DJG இல், எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உண்மையான ஒளிமயமான அனுபவத்தை வழங்குவதன் மூலம் இந்த மகிழ்ச்சியை அதிகரிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்களின் தீபாவளி பிரச்சாரம் பண்டிகை காலத்தை மறக்க முடியாததாக மாற்றுவதில் எங்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!