அமீரக செய்திகள்

துபாய்: டிராம் சேவை தொடங்கி 9 ஆண்டுகளில் 52 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்து அசத்தி சாதனை..!!

துபாய் டிராம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் சுமார் 52 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்து சாதனை படைத்துள்ளதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. மேலும், இது முதன்முதலில் நவம்பர் 11, 2014 அன்று தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 5.3 மில்லியன் கிலோமீட்டர் பயணித்துள்ளதாகவும் ஆணையம் கூறியுள்ளது.

மேலும், டிராம் சேவையின் இத்தகைய சாதனைகள் தடையற்ற பயணிகள் போக்குவரத்து மற்றும் பயணிகளின் திருப்தி நிலைகளுக்கு ஒரு சான்றாகும் என்று RTA குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக X தளத்தில் RTA வெளியிட்ட பதிவில், பயண நேர அமைப்பில் மாற்றியமைத்தல் மற்றும் நேரம் தவறாமையை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் டிராம் பயண நேரத்தை சராசரியாக இரண்டு நிமிடங்கள் வெற்றிகரமாகக் குறைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மேம்பாடுகள் டிராமை மிகவும் திறமையான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து முறையாக மாற்றியுள்ளதாகவும், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்த்துள்ளதாகவும் RTA கூறியுள்ளது.

துபாய் டிராம்:

துபாய் மெரினாவிலிருந்து பாம் ஜுமைரா மற்றும் அல் சுஃபுஹ் வரை அல் சுஃபூஹ் சாலையில் செல்லும் 14.5 கிமீ துபாய் டிராம், துபாய் மெட்ரோ மற்றும் பாம் மோனோரயிலை இணைக்கும் துபாயின் பொதுப் போக்குவரத்து நெட்வொர்க்கின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

இது துபாய் மெரினா, ஜுமைரா பீச் ரெசிடென்ஸ் (JBR) மற்றும் அல் சுஃபுஹ் சாலை, துபாய் மீடியா சிட்டி, பாம் ஜுமேரா மற்றும் துபாய் நாலெட்ஜ் பார்க் வழியாகச் செல்வதால், பிரபலமான சுற்றுலாப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவுகிறது.

RTAவின் படி, துபாய் டிராம் ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள முதல் டிராம்வே திட்டமாக கருதப்படுகிறது, இது டிராக்கில் விரிவடையும் தரை வழி மின்சார விநியோக அமைப்பால்  (ground-based electric supply system) இயக்கப்படுகிறது மற்றும் இதற்கு (catenary) தொங்கும் கேபிள் இணைப்புகள் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!