அமீரக செய்திகள்

அமீரகமெங்கும் நேற்று வெளுத்து வாங்கிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை.. வீடியோவை வெளியிட்ட புயல் மையம்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று மேகமூட்டமான வானிலை நிலவி வந்த நிலையில், நாட்டின் சில பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. நேற்றைய வானிலை குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்தவாறே துபாய், அபுதாபி, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் ஃபுஜைரா போன்ற எமிரேட்களின் உள்பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது.

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டிருந்த முன்னறிவிப்பில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், சனிக்கிழமை நவம்பர் 4ம் தேதி முதல் புதன்கிழமை நவம்பர் 8ம் தேதி வரை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பின்படி, நேற்று பிற்பகலில் அல் மர்மூம் மற்றும் அல் லிசாலி உட்பட துபாயின் சில பகுதிகளிலும் சாரல் மழை பெய்துள்ளது. இதற்கிடையில், புயல் மையம் மழை தாக்கி வரும் பகுதிகளில் உள்ள நிலைமைகளைக் காட்டும் பல்வேறு வீடியோ கிளிப்களை சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் ஷார்ஜாவில் உள்ள பாலைவனப் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

 

இவ்வாறு நாட்டின் அனைத்து எமிரேட்களும் மழையால் பாதிக்கப்பட்டு வருவதால், NCM ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை வெளியிட்டு நேற்று இரவு 8.30 மணி வரை நிலையற்ற வானிலை நீடிக்கும் என்றும் குடியிருப்பாளர்களை எச்சரிக்கை விடுத்திருந்தது.

நாடு முழுவதும் நிலவி வரும் இந்த சீரற்ற வானிலைக்கு மத்தியில், அபுதாபி காவல்துறை பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும், நீரோடைகள் அல்லது எந்தவொரு பள்ளத்தாக்குகளில் இருந்தும் விலகி இருக்குமாறு வாகன ஓட்டிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை மீறி, மழை நேரங்களில் வெள்ளம் சூழ்ந்த பள்ளத்தாக்குகளுக்குள் நுழைந்தால், 2,000 திர்ஹம் அபராதம், 23 பிளாக் பாயிண்ட்கள் மற்றும் 60 நாள் வாகன பறிமுதல் என கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளை மழைத் தாக்கி வருவதால் நாட்டில் வெப்பம் தணிந்துள்ளதாகவும், நாட்டிலேயே நேற்று மிகக் குறைந்த வெப்பநிலை 14.2 டிகிரி செல்சியஸ் ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெய்ஸ் மலையில் பதிவாகியுள்ளதாகவும் NCM தெரிவித்துள்ளது. அத்துடன் அமீரகமெங்கும் இதே வானிலை இந்த வாரம் முழுவதும் நீடிக்கும் என்று NCM அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!