அமீரக செய்திகள்

அமீரகத்தில் வழக்கமானதை விட அதிகளவு மழை இந்த மாதம் பெய்யும்..!! அடுத்தடுத்த மாதங்களிலும் மழை தொடரும் என வானிலை மையம் தகவல்..!!

கடந்த சில நாட்களாகவே ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகின்ற நிலையில், நாட்டில் கடந்த ஆண்டுகளை விட இந்த மாதம் வழக்கத்தை விட அதிக மழை பதிவாகியுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

நேற்று (திங்கள்கிழமை) பிற்பகலில் துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் லேசான சாரல் மழை பெய்த அதே நேரத்தில், ராஸ் அல் கைமா, ஃபுஜைரா, ஷார்ஜா மற்றும் அபுதாபி போன்ற எமிரேட்களில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக, ஃபுஜைரா அதிக மழைப்பொழிவைப் பதிவு செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து மேகமூட்டமான வானிலை நிலவி வருவதால், குடியிருப்பாளர்கள் இந்த வாரம் முழுவதும் கனமழையை எதிர்பார்க்கலாம் என்று NCM அறிவித்துள்ளது.

இந்நிலையில், NCM மற்றும் புயல் மையத்தின் சமூக ஊடகக் கணக்குகள் பல்வேறு எமிரேட்களில் நேற்று நிலவிய சீரற்ற வானிலையைக் காட்டும் வீடியோக்களை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ கிளிப்களில், துபாயில் கனமழையின் போது வீடு திரும்பும் வாகன ஓட்டிகளையும், ஃபுஜைராவில் கொட்டித் தீர்த்த பலத்த மழையையும் காணலாம்.


மேலும், நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது, இது வாகன ஓட்டிகள் அல்லது மலையேறுபவர்களுக்கு ஆபத்தானது. எனவே, வாகன ஓட்டிகள் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு NCM எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமீரகத்தின் வானிலை குறித்து செய்தி ஊடகம் ஒன்றில் பேசிய NCM அதிகாரி, அடுத்த சில மாதங்களில் நாடு பல்வேறு தீவிரம் கொண்ட மழையை தொடர்ந்து அனுபவிக்கும் என்று கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இப்போது மழைக்காலம் தொடங்கியிருப்பதால் சிறிய மழை மற்றும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். பொதுவாக, நாட்டில் நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபுஜைராவில் அதிகபட்ச மழைப்பொழிவு:

இதுவரை ஃபுஜைராவில் மட்டும் 56 மிமீ மழை பதிவாகியுள்ளதாக NCM அறிவித்துள்ளது. இது மற்ற எமிரேட்களை விட அதிகபட்ச மழைப் பொழிவாகும்.

NCM வெளியிட்ட சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, அமீரகத்தின் கடலோர, கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் மழையை உருவாக்கக்கூடிய சில வெப்பச் சலன மேகங்கள் உருவாகும் என்பதால், இந்தப் பகுதிகளில் வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், சில சமயங்களில் லேசான காற்று வீசும், அது படிப்படியாக வலுவடைந்து பலத்த காற்று வீசக்கூடும். இதனால் தூசி நிறைந்த சூழல் உருவாக வாய்ப்புள்ளது. இதற்கிடையில், அரேபிய வளைகுடாவில் மேகமூட்டமான வானிலையுடன் கடல் சற்று கொந்தளிப்பாகவும், ஓமன் கடலில் மிதமாகவும் இருக்கும் என்று NCM தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!