அமீரக செய்திகள்

அமீரகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.. தனியார் நிறுவனங்கள் நெகிழ்வான வேலை முறையை பின்பற்ற MOHRE அறிவுரை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் இன்று இரவு முதல் மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாளை வியாழக்கிழமை நவம்பர் 17 ம் தேதி நெகிழ்வான பணி அமைப்புகளைப் பயன்படுத்துமாறு தனியார் நிறுவனங்களுக்கு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MOHRE) அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து தனியார் நிறுவனங்களுக்கு மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்தியாவசியமான வெளிப்புற வேலைகளை உறுதிப்படுத்த நிறுவனங்களால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நிறுவனங்கள் தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அத்துடன் வெளிப்புற வேலை இடங்களுக்குச் செல்லும் மற்றும் வெளியே வரும் தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பையும் தனியார் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MOHRE) தனது அறிக்கையில் கூறியுள்ளது.

அமீரகத்தின் சில இடங்களில் இன்று கனமழை பெய்து வருவதால், ராசல் கைமாவில் உள்ள அரசுப் பள்ளிகளில் நாளை தொலைதூர வகுப்புகள் நடத்தப்படும் என்று இன்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. மேலும் மழைக்காலங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நெருக்கடி மேலாண்மைக் குழுக்களும் எமிரேட்டில் அதிக உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அமீரகத்தின் வானிலை குறித்து தேசிய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டின் கிழக்கு, வடக்கு மற்றும் கரையோரப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் மின்னல், இடி மற்றும் பல்வேறு தீவிரம் கொண்ட கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!