அமீரக செய்திகள்

துபாயில் காலையிலேயே கொட்டித்தீர்த்த கனமழை!! நாடு முழுவதும் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை விடுத்துள்ள NCM..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே, நேற்று வியாழக்கிழமை ராஸ் அல் கைமாவில் மழை கொட்டித் தீர்த்த நிலையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் அமீரகவாசிகள் காலை நேரத்தில் இடியுடன் கூடிய கனமழையை அனுபவித்துள்ளனர்.

துபாய் எமிரேட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையை கருத்தில்கொண்டு காவல்துறையினர் பொது பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டதுடன் கடற்கரைகள் மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறு குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், துபாயின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக வாகனத்தை ஓட்டவும், குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக செயல்படவும் காவல்துறை ஆணையத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

துபாயின் அபு ஹெயில் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் வீடியோவும் வெளியாகியுள்ளது. அதேபோல், உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவின் உச்சியில் மின்னல் ஒளிரும் வீடியோ காட்சியையும் புயல் மையம் சமூக ஊடக தளத்தில் பகிர்ந்துள்ளது. மற்றொரு வீடியோவில், சாலைகளில் ஓடும் வெள்ள நீரில் வாகனங்கள் செல்வதையும் பகிர்ந்துள்ளது.

 

நேற்று முதல் பெய்து வரும் இந்த கனமழையானது துபாய் மட்டுமின்றி, அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட நாட்டின் மற்ற எமிரேட்களிலும் பதிவாகியுள்ளது. இவ்வாறு அமீரகம் முழுவதும் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து வருவதால், தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) நாடு முழுவதும் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

அதேசமயம், துபாய் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்குமாறு மாணவர்களின் பெற்றோருக்கு மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளது. நேற்று, அஜ்மான், உம் அல் குவைன் மற்றும் ராஸ் அல் கைமாவில் உள்ள அதிகாரிகள் இன்று பள்ளிகளை தொலைதூரக் கல்விக்கு மாற்றுமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

NCM வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, அமீரகத்தில் இன்று வெப்பநிலை குறையும் மற்றும் இன்றிரவு மற்றும் சனிக்கிழமை காலை வானிலை ஈரப்பதமாக இருக்கும். குறிப்பாக, நாட்டின் மலைப் பகுதிகளில் வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்றும், உள் பகுதிகளில் அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!