UAE: பிரபலமான டிஸர்ட் சஃபாரி இடத்தில் விபத்து.. ஆசிய நாட்டவர் பலி.. அப்பகுதியை மூட உத்தரவிட்ட காவல்துறை..!!
அமீரகத்தில் நேற்று (நவம்பர் 17, 2023 வெள்ளிக்கிழமை) மாலை, ஷார்ஜாவில் உள்ள அல் ஃபயா பாலைவனத்தில் மணல் குன்றுகளில் ஏறும் போது ஏற்பட்ட விபத்தில் ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்தார் என்று உள்ளூர் காவல்துறை தெரிவித்திருந்தது.
இதனையடுத்து சமூக உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ஷார்ஜா எமிரேட்டின் மத்திய பகுதியில் உள்ள அல் ஃபயா குன்றுகள் பகுதியை (al faya dunes area) அதிகாரப்பூர்வமாக மூடுவதாக ஷார்ஜா காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து, ஷார்ஜா போலீஸ் கமாண்டர்-இன்-சீஃப் மேஜர் ஜெனரல் சைஃப் அல் ஜாரி அல் ஷம்சி கூறியதாவது: “மழைக்காலத்தை அனுபவிக்க ஏராளமான பொதுமக்கள் பாலைவன பகுதிகளுக்கு விடுமுறை நாட்களில் செல்கின்றனர், அவர்களில் பலர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்காமல் இது போன்று சாகச வேலைகளில் ஈடுபடுகின்றனர். இது அவர்களது உயிருக்கே சில நேரம் ஆபத்தை விளைவிக்கின்றது” என தெரிவித்துள்ளார்.
அத்துடன் குளிர்காலத்தில் குடும்பங்கள் தங்களின் நான்கு சக்கர வாகனங்கள் அல்லது மோட்டார் சைக்கிள்களுடன் சிறந்த வானிலையை அனுபவிக்க அடிக்கடி அங்கு செல்வதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும், பாதுகாப்பு என்பது பகிரப்பட்ட பொறுப்பு என்றும், பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் சட்டவிரோதமாக ஆஃப்-ரோடிங் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களுடன் வரும் குடும்பங்கள் அல்லது தனிநபர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை அனுபவமிக்க ஆஃப்-ரோடர்கள் மீண்டும் வலியுறுத்துகின்றனர்.
மேலும் இவ்வாறு செல்லும் நபர்கள் தனியாக செல்ல வேண்டாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சாலைக்கு வெளியே பாலைவனத்தில் வாகனத்தை ஓட்டுவதற்கு முன், மக்கள் சரியான பாதுகாப்பு உபகரணங்களை எடுத்துச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.