அமீரக செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. தேசிய தின விடுமுறையை நீட்டித்த அமீரகம்.. புதிய உத்தரவை வெளியிட்ட MoHRE..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு தனியார் துறை ஊழியர்களுக்கு கூடுதல் நாள் விடுமுறை அளிப்பதாக மனிதவள மற்றும் குடியேற்ற அமைச்சகம் தற்பொழுது அறிவித்துள்ளது. ஏற்கெனவே தேசிய தினத்தை முன்னிட்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய இரு தேதிகள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது இந்த விடுமுறை நாட்கள் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், டிசம்பர் 4, 2023 திங்கட்கிழமை வரை விடுமுறை நீட்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவே, ஊழியர்கள் டிசம்பர் 2 முதல் 4 வரை மூன்று நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையைப் பெறுவார்கள்.

அதேபோல், பொதுத்துறை ஊழியர்களும் டிசம்பர் 2 முதல் 4 வரை மூன்று நாள் விடுமுறையைப் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் விடுமுறைக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 1) தொலைதூரத்தில் வேலை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட மூன்று நாள் விடுமுறை முடிந்ததும், அனைத்து ஊழியர்களும் மீண்டும் டிசம்பர் 5 செவ்வாய்க்கிழமை அலுவலகத்திற்குத் திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

அமீரகத்தில் கடந்த சில வருடங்களாக பின்பற்றப்பட்டு வரும் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த விடுமுறைக் கொள்கையானது அனைத்து ஊழியர்களும் ஆண்டு முழுவதும் சம எண்ணிக்கையிலான விடுமுறைகளைப் பெறுவதை உறுதி செய்கிறது.

தேசிய தின விழா

ஐக்கிய அரபு அமீரகம் யூனியன் தின விழா என்றழைக்கப்படும் தேசிய தின விழாவை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ஆம் தேதி அனுசரித்து வருகிறது. இந்த ஆண்டு 52வது தேசிய தின விழாவைக் கொண்டாடும் அமீரகத்தில் டிசம்பர் 2ஆம் தேதி அதிகாரப்பூர்வ விழா நடைபெறும் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. இந்த விழா துபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!