வளைகுடா செய்திகள்

இந்தியர்களுக்கு 96 மணிநேர உம்ரா விசாவை அறிமுகப்படுத்தும் சவுதி..!! டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சவுதி அமைச்சர்…

சவுதி அரேபிய அரசானது இந்தியப் பயணிகளுக்காக 96 மணிநேர உம்ரா ஸ்டாப்ஓவர் விசாவை அறிமுகப்படுத்த இருப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன், 48 மணி நேரத்திற்குள் இந்த விசா வழங்கப்படவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்பிக் பின் ஃபவ்ஸான் அல்-ரபியா அவர்கள், இந்திய குடிமக்கள் இப்போது வணிக, சுற்றுலா மற்றும் உம்ரா விசாக்களில் உம்ரா செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், இனி மேற்கு (ஆசியா) அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கும் இந்தியர்கள் 96 மணிநேர ஸ்டாப்ஓவர் விசாவைப் பெறலாம் மற்றும் டிக்கெட் வழங்கும் செயல்முறைக்குள் விசாவைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து அமைச்சர் கூறுகையில் இது அவர்களை உம்ரா செய்ய அனுமதிக்கும் மற்றும் சவுதி அரேபியாவின் எந்த நகரத்திற்கும் செல்ல அனுமதிக்கிறது என்று கூறியுள்ளார். இந்தியாவிலிருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், 2023 ஆம் ஆண்டில் 1.2 மில்லியனைத் தாண்டியுள்ளதாகவும், இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 74 சதவீதம் அதிகமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு அதிகரித்து வரும் இந்திய வழிபாட்டாளர்களுக்கு இடமளிக்க நேரடி விமான சேவைகளின் வரம்பை மேம்படுத்த இரு நாடுகளும் ஆலோசித்து வருவதாகவும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரையும் அல்-ரபியா சந்தித்துப் பேசியுள்ளார். இது தொடர்பாக ஜெய்சங்கர் X தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்திய குடிமக்களின் ஹஜ் பயணத்தை சுமூகமாக எளிதாக்குவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை ஆழப்படுத்துவது தொடர்பான விவகாரங்கள் இந்த விவாதங்களில் அடங்கும் என்று கூறியுள்ளார்.

அமைச்சர் அல்-ரபியாவின் இந்த பயணத்தின் போது இந்தியாவின் ஹஜ் யாத்திரை ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து விவாதிக்க இந்திய ஹஜ் குழு நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

2023 ஹஜ் ஒதுக்கீட்டின் கீழ், சுமார் 175,000 இந்தியர்கள் ஹஜ் எனும் புனித பயணத்திற்காக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளனர். ஹஜ் ஒதுக்கீட்டை தற்போதுள்ள 175,025 இலிருந்து குறைந்தபட்சம் 200,000 ஆக உயர்த்துவது பற்றி விவாதிப்பது இந்த நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாகும் என்று இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் முனாவாரி பேகம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!