அமீரக செய்திகள்

அமீரகத்தில் தனியார் கல்வித் துறையில் 4,000 எமிராட்டிகளை பணியமர்த்த புதுமுயற்சி!! வெளிநாட்டினருக்கு குறையும் வேலைவாய்ப்பு..

ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் 2024 முதல் ஒவ்வொரு ஆண்டும் கல்வித் துறையில் 1,000 எமிரேட்டிகளை பணியமர்த்த முயலும் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதால், எமிராட்டிசேஷன் இயக்கத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் நான்கு ஆண்டுகளுக்குள் 4,000 எமிராட்டிகளை தனியார் கல்வி நிறுவனங்களில் பணியமர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறிப்பாக, கற்பித்தல் மற்றும் பள்ளி தொடர்பான வேலைகளைத் தேடும் எமிராட்டியர்கள், கல்வியில் இளங்கலைப் பட்டமும், நிர்வாக மற்றும் உதவிப் பணிகளுக்கு தகுதி பெற அவர்கள் குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி பட்டமும் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

மேலும், எமிராட்டிகளுக்கு கல்வித் துறையில் வேலைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயிற்சி அளிக்கவும் படிப்புகளை வழங்கவும் ‘Teaching Specialists Programme’ என்ற திட்டம் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE), கல்வி அமைச்சகம் (MOE) மற்றும் எமிராட்டி டேலண்ட் போட்டித்திறன் கவுன்சில் (Nafis) ஆகியவற்றால் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், திட்டத்தில் சேர ஆர்வமுள்ளவர்கள் Nafis தளத்தில் பதிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்திட்டம் பின்வரும் நான்கு பிரிவுகளில் பயிற்சி அமர்வுகளை வழங்கும்:

  1. நிர்வாகத் தொழில்கள்
  2. அரபு மொழி, இஸ்லாமிய, சமூக ஆய்வுகள் மற்றும் தேசிய அடையாளத்தில் கற்பித்தல் பதவிகள்
  3. மழலையர் பள்ளி, ஆரம்ப பள்ளி மற்றும் சிறப்பு கல்வி ஆசிரியர்கள்
  4. கல்வி வழிகாட்டுதல் மற்றும் தலைமைப் பதவிகளின் வல்லுநர்கள்

இந்தத் திட்டத்தை செயல்படுத்த Nafis பின்வரும் ஐந்து நிறுவனங்களுடன் இணைந்துள்ளது:

  1. Higher Colleges of Technology
  2. United Arab Emirates University
  3. University of Sharjah
  4. Sharjah Education Academy
  5. Emirates College for Advanced Education

இந்த கல்வி நிறுவனங்கள் இலக்கு பயிற்சி திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தும் என்றும், இது இலக்கு வைக்கப்பட்ட வேலைகளில் அமீரக நாட்டு குடிமக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பதிவு செயல்முறைகள், தேர்வுகள், சேர்க்கைகள் மற்றும் தனிப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களைக் கண்காணித்தல் ஆகியவற்றை முடிக்க தேவையான ஆதரவும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நஃபிஸின் பொதுச் செயலாளர் கன்னம் அல் மஸ்ரூயி கூறுகையில், ஆசிரியம் என்பது ஒரு உன்னதமான மற்றும் ஊக்கமளிக்கும் தொழில். இந்தத் துறையின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், எமிராட்டிகள் இதில் ஒரு பகுதியாக இருக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து பேசிய MOHREஇன் எமிராட்டிசேஷன் விவகாரங்களின் துணைச் செயலாளர் ஆயிஷா பெல்ஹார்ஃபியா என்பவர், அமீரகத்தின் கல்வித் துறையை தகுதிவாய்ந்த மற்றும் புகழ்பெற்ற எமிராட்டி கல்வியாளர்களால் வளப்படுத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, தனியார் கல்வித் துறையில் ஆர்வமுள்ள குடிமக்களுக்கு இந்தத் திட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று MOE இன் உயர்கல்வி கல்வி விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் டாக்டர் முகமது அல் முஅல்லா தெரிவித்துள்ளார். இவை நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் கல்வித்துறையில் வேலை பார்த்து வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை குறையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!