துபாய்: கார் சன் ரூஃப் மற்றும் விண்டோ வழியே எட்டிப் பார்த்தாவாறே பயணிக்கும் குழந்தைகள்!! 2,000 திர்ஹம்ஸ் அபராதம், 23 ப்ளாக் பாய்ண்ட்ஸ், 2 மாதம் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை….
துபாய் காவல்துறை ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களில் ஜன்னல் வழியாக தலையை நீட்டுவது அல்லது உடலின் எந்தப் பகுதியையும் ஜன்னலுக்கு வெளியே வெளிப்படுத்துவது மற்றும் காரின் ரூஃபிற்கு (roof) வெளியே நிற்பது போன்ற ஆபத்தான நடைமுறைகளுக்கு எதிராக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
மேலும், போக்குவரத்து விதிகளை மீறி ஓடும் வாகனங்களில் ரூஃப் மீது உட்கார்ந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், அபராதம் மற்றும் பிளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படுவதுடன் வாகனம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சாலைகளில் செல்லும் கார் ரூஃப்களில் அமர்ந்து ஜன்னல்களுக்கு வெளியே குழந்தைகள் தலையை நீட்டும் வீடியோவை பகிர்ந்த காவல்துறையானது, கடந்த ஆண்டில் ஓடும் வாகனங்களில் இருந்து விழுந்ததில் ஐந்து பேர் காயம் அடைந்ததாகவும், தங்கள் மற்றும் பிறரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதால் மொத்தம் 1,183 விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டு 707 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
القيادة العامة لـ #شرطة_دبي تدعو إلى توخي الحيطة والحذر أثناء القيادة، مُحذرة السائقين من تعريض حياتهم أو حياة الآخرين أو سلامتهم أو أمنهم للخطر. pic.twitter.com/y6T6MvEebN
— Dubai Policeشرطة دبي (@DubaiPoliceHQ) February 9, 2024
இத்தகைய மீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு 2,000 திர்ஹம் அபராதம், 23 கருப்பு புள்ளிகள் விதிக்கப்படுவதுடன் 60 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க உரிமையாளர் மேலும் 50,000 திர்ஹம் செலுத்த வேண்டும் என்றும் துபாய் காவல்துறை நினைவூட்டியுள்ளது.
இது குறித்து துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொதுத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி கூறுகையில், போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் இணங்கினால் மட்டுமே பல சாலை விபத்துகளைத் தவிர்க்க முடியும் என்று எடுத்துரைத்துள்ளார்.
அத்துடன் துபாய் போலீஸ் செயலியில் உள்ள “Police Eye” சேவை மூலமாகவோ அல்லது 901 என்ற எண்ணில் “We Are All Police” சேவையைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ சாலைப் பாதுகாப்பு மீறல்கள் ஏதேனும் இருந்தால் புகாரளிக்கலாம் என்றும் துபாய் காவல்துறையால் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel