துபாயில் 20 நிமிடங்களில் ஏற்பட்ட 50 விபத்துக்கள்..!! போக்குவரத்து நெரிசல் காரணம் என தகவல்..!!

துபாயில் நேற்று (திங்கள்கிழமை) காலை 20 நிமிடங்களில் சுமார் 50 சாலை விபத்துகள் துபாய் காவல்துறையின் அதிகாரப்பூர்வ செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணிக்கு, எமிரேட்டின் மேப் ஓவர்வியூவில் நகரம் முழுவதும் விபத்துகளை குறிக்கும் ஊதா நிற ஐகான்கள் நிறைந்திருப்பதைக் கீழே உள்ள வரைபடத்தில் பார்க்கலாம்:
எமிரேட்டுகளுக்கு இடையே செல்லும் சாலைகளிலும் முக்கிய சாலைகளிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் ஒரு காரணம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் தற்போது, எமிரேட்டுகளுக்கு இடையேயான போக்குவரத்துச் சிக்கல்களைத் தணிக்கவும், பயண நேரத்தைக் குறைக்கவும், நகரம் முழுவதும் பல சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஷேக் சையத் சாலையில் உள்ள அமெரிக்கன் யுனிவர்சிட்டிக்கு அருகில் உள்ள ஐந்தாவது சந்திப்பிலிருந்து துபாய் ஹார்பர் ஸ்ட்ரீட் வரை புதிய பாலம் அமைக்கும் திட்டத்தை RTA அறிவித்தது, இதனால் பயண நேரம் 12 நிமிடங்களில் இருந்து 3 நிமிடங்களாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 1,500 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலத்தில் ஒவ்வொரு திசையிலும் இரண்டு பாதைகள் இருக்கும் என்றும், இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டதும் துபாய் துறைமுகத்திற்கு சுமூகமான போக்குவரத்து ஓட்டத்தை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், அல்ஜீரியா ஸ்ட்ரீட் மற்றும் அல் கவானீஜ் ஸ்ட்ரீட் (தெற்கு) சந்திப்பிலிருந்து துனிஸ் ஸ்ட்ரீட் , அல் முஹைஸ்னா (1) மற்றும் அல் மிசார் (1) ஆகிய இடங்களில் 2 கிமீ நீளமுள்ள சாலையில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும் திட்டமும் RTAஆல் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சாலைகளில் புதிய AI இயங்கும் அமைப்பை அறிமுகப்படுத்த துபாய் காவல்துறை தயாராகி வருகிறது. இந்த நுட்பம் ஒரு விபத்தில் யார் தவறு செய்தார்கள் என்பதையும் தீர்மானிக்கும், காவல்துறையின் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. மேலும், இந்த அமைப்பு சாலை விபத்துகளைப் புகாரளிக்க ஓட்டுநர்களுக்கு எளிதான வழியை வழங்குகிறது. யாராவது விபத்தில் சிக்கினால், அவர்கள் துபாய் போலீஸ் செயலியில் புகைப்படங்களுடன் தரவைச் சமர்ப்பிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் 2023 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்தியவாறே வாகனம் ஓட்டியதால் 35,000 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பிடிபட்டுள்ளனர். இந்த ஆபத்தான நடைமுறை 99 விபத்துகளுக்கு வழிவகுத்தது, இதன் விளைவாக ஆறு பேர் பலியான நிலையில், 58 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.
அமீரகத்தின் போக்குவரத்து சட்டத்தின் படி, சாலையில் செல்போன்களைப் பயன்படுத்தி பிடிபட்ட ஓட்டுநர்களுக்கு 800 திர்ஹம்ஸ் அபராதமும் நான்கு பிளாக் பாயின்ட்களும் விதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் 2023 ஆம் ஆண்டில் ரன்-ஓவர் விபத்துக்களில் எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 339 பேர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel