அமீரக செய்திகள்

சாலைப் பாதுகாப்பில் ரோபோவை களமிறக்கும் துபாய்.. மார்ச் முதல் சோதனையில் ஈடுபடும் என RTA அறிவிப்பு..!!

துபாயில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் துபாய் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சாலைகளில் சைக்கிள் மற்றும் இ-ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துபவர்களின் விதிமீறல்களைக் கண்டறிய ரோபோவை RTA வெகுவிரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துபாயில் நேற்று (பிப்ரவரி 28) சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) நடத்தப்பட்ட ‘Mena Transport Congress and Exhibition 2024’ கண்காட்சியில், ரோபோவின் சோதனை நடவடிக்கையைத் தொடங்க ரோபோட்டிக்ஸ் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகள் வழங்குநரான டெர்மினஸ் (Terminus) குழுமத்துடன் RTA ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதன் படி, சைக்கிள் மற்றும் இ-ஸ்கூட்டர்களைக் கண்காணிக்க பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ள இந்த ரோபோ, துபாய் சாலைகளில் மார்ச் முதல் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விதி மீறலில் ஈடுபடும் நபர்களுக்கு 300 திர்ஹம் அபராதமாக விதிக்கப்படும்.

செயற்கை தொழில்நுட்பமான AI மூலம் செயல்படும் இந்த ரோபோ, ஹெல்மெட் அணியாதது, நியமிக்கப்படாத இடங்களில் பார்க்கிங் செய்வது, ஒரு இ-ஸ்கூட்டர்களில் பல நபர்கள் சவாரி செய்வது மற்றும் பாதசாரிகளுக்கென ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் ஓட்டுவது போன்ற பல்வேறு விதிமீறல்களைக் கண்டறியும் திறன் கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த ரோபோவால் 85 சதவீதத்திற்கும் அதிகமான துல்லியத்துடன் 2 கிமீ வரை கண்காணித்து, விதிமீறல்களை கண்டறிய முடியும் என்றும், 5 வினாடிகளுக்குள் தரவை வழங்க முடியும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் கண்டறிந்த மீறல்களை உடனடியாக துபாய் காவல்துறையுடன் இணைந்து அவற்றைப் பகிர்ந்து பகுப்பாய்வு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், 1.5 மீட்டர் இடைவெளிக்குள் எந்தவொரு பொருளையும் அல்லது தனி நபரையும் கண்டறிந்தால் அதற்கேற்ப தனது நகர்வை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ளும் திறன் கொண்ட இந்த அதிநவீன ரோபோவின் முதல் கட்ட சோதனை நடவடிக்கை ஜுமேரா 3 கடற்கரை பகுதியில் தொடங்கப்படும் என்றும், எதிர்காலத்தில் பரந்த அளவில் இந்த ரோபோவை செயல்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்றும் RTA தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!