அமீரக செய்திகள்

அமீரகத்தில் கள்ள நோட்டு எச்சரிக்கை.. குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளைக் குறிவைக்கும் போலி கரன்சி எக்ஸ்சேஞ் டீலர்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஏமாற்றும் போலி கரன்சி எக்ஸ்சேஞ் டீலர்கள் குறித்து அமீரக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, விடுமுறை நாட்களில் இந்த மோசடி கும்பல் போலியான கரன்சி எக்ஸ்சேஞ் சலுகைகளைக் கொண்டு மக்களை ஏமாற்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாக அபுதாபி நீதித்துறை (Abu Dhabi Judicial Department – ADJD) தெரிவித்துள்ளது.

ADJD அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கில், மோசடி குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், அமீரகத்தில் வெளிநாட்டு நாணயத்தை மாற்றும்போது அங்கீகரிக்கப்பட்ட எக்ஸ்சேஞ் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை மட்டுமே பயன்படுத்துமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, மக்களை மோசடி வலையில் வீழ்த்துவதற்காக, மோசடி கும்பல் சமூக ஊடகங்களில் தாராளமான பரிமாற்ற விகிதங்களை வழங்குவதாகவும், லாபகரமான சலுகைகள் கிடைக்கும் என்றும் விளம்பரம் செய்கின்றன. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அதிகாரம் தெரிவித்துள்ளது.

ADJD ன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், “விடுமுறை நாட்களைப் பயன்படுத்திக் கொள்ளும் மோசடி செய்பவர்கள் மற்றும் கள்ளநோட்டுக் கும்பல்கள், சமூக ஊடக தளங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் மக்களை கவர்ந்திழுக்கின்றன. மக்கள் இத்தகைய இலாபகரமான சலுகைகளைத் தவிர்க்க வேண்டும் மற்றும் இதுபோன்ற சந்தேகத்திற்குரிய ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி பணத்தை மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும், மாற்றப்பட்ட நோட்டுகள் உண்மையானதாக இருந்தாலும், உரிமம் பெறாத எக்ஸ்சேஞ் நிறுவனங்களைத் தவிர்க்குமாறும் அதிகாரம் கேட்டுக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, ரூபாய் நோட்டுகளின் சந்தேகத்திற்குரிய தோற்றம் மேலும் சிக்கலுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், அமீரகத்தின் மத்திய வங்கி (CBUAE) பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்யும் குற்றத்திற்கு எதிராக எக்ஸ்சேஞ் நிறுவனம் ஒன்றிற்கு 4.8 மில்லியன் திர்ஹம்ஸ் அபராதம் விதித்தது. எனினும் அந்த எக்ஸ்சேஞ் நிறுவனத்தின் பெயர் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!