அமீரகவாசிகளுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ள NCM!! மீண்டும் கனமழை பதிவாகும் என்று வானிலைத் துறை கணிப்பு….

கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை தணிந்தது. இதனால் குடியிருப்பாளர்கள் குறைந்த வெப்பநிலையுடன் இனிமையான காலநிலையை அனுபவித்தனர். இருப்பினும் பலர் தங்களின் கடைகள், கார்கள் மற்றும் வீடுகளில் சேதங்களையும் எதிர்கொண்டனர்.
இவ்வாறு ஒரு வாரம் குளிர்ந்த வெப்பநிலையை அனுபவித்த குடியிருப்பாளர்கள், மீண்டும் அடுத்த வாரம் கனமழை மற்றும் தூசி புயல்களை எதிர்பார்க்கலாம் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) முன்னறிவித்துள்ளது. அதாவது நாடு தற்போது தென்மேற்கில் இருந்து உருவாகும் மேற்பரப்பு குறைந்த அழுத்த அமைப்பின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலைத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், வருகின்ற ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைக்கான முன்னறிவிப்பில், அந்த நாட்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில வடக்கு, கிழக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திங்கள்கிழமையன்று மேற்குப் பகுதிகளில் வெப்பநிலை வீழ்ச்சியடைவதை குடியிருப்பாளர்கள் உணருவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
NCM வெளியிட்ட முன்னறிவிப்பின் படி, தென்கிழக்கில் இருந்து வடமேற்கு திசையில் காற்று லேசானது முதல் மிதமானது வரை வீசும் என்றும், குறிப்பாக மேகமூட்டமான நிலையில், தூசி மற்றும் மணல் வீசுவதற்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடலில் கடலின் சீற்றம் சிறிது முதல் மிதமானதாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த வாரம் பதிவான மழைப்பொழிவு முப்பது வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பதிவான மழைக்கு சமம். திடீரென கொட்டித் தீர்த்த மழையால் நாடு வெள்ளத்தில் மூழ்கியது, ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர் மற்றும் பள்ளிகள் தொலைநிலைக் கற்றலுக்கு மாறியது.
ஐக்கிய அரபு அமீரகம் பிப்ரவரி 11 முதல் 15 வரை 27 கிளவுட் சீடிங் நடவடிக்கைகளை மேற்கொண்டது, இந்த பணிகள் நாட்டில் மழைப்பொழிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel