அமீரக செய்திகள்

அமீரகத்தில் தொடரும் மழை: ஏர்போர்ட் செல்லும் பயணிகள் முன்கூட்டியே செல்லுமாறு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தல்..!!

அமீரகத்தில் நிலவி வரும் நிலையற்ற வானிலை காரணமாக, இன்று (திங்கள்) மற்றும் நாளை (செவ்வாய்) நாட்டிற்கு வெளியே பயணிக்கவுள்ள பயணிகள் தாமதத்தைத் தவிர்ப்பதற்காக விமான நிலையத்திற்கு முன்கூட்டியே செல்ல கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அமீரக விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

அதே நேரத்தில் எமிரேட்ஸ், எதிஹாட் மற்றும் ஃப்ளைதுபாய் ஆகியவற்றின் அனைத்து விமானங்களும், திட்டமிட்டபடி இயக்கப்படுகின்றன மற்றும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எமிரேட்ஸ் ஏர்லைன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் “பிப்ரவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் துபாயில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் சாலை தாமதங்களை சந்திக்க நேரிடும். இதனால் விமான நிலையத்தை அடைய கூடுதல் பயண நேரத்தை திட்டமிடவும், கூடுதல் வசதிக்காக வருகைக்கு முன்னதாக செக்-இன் செயல்முறையை முடிக்கவும் நாங்கள் பரிந்துரைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

துபாயை தளமாகக் கொண்ட மற்றொரு கேரியரான ஃப்ளைதுபாய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “விமான நிலையத்திற்கு உங்கள் பயணத்திற்கு கூடுதல் நேரத்தை ஒதுக்கவும். உங்கள் விமானம் புறப்படும் நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் வந்து சேர வேண்டும். எங்கள் இணையதளத்தைப் பார்ப்பதன் மூலம் உங்கள் விமானத்தின் நிலையைப் பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள். விமான முன்பதிவின் போது உங்கள் தொடர்பு விவரங்களைச் சேர்க்கவும், அதனால் நாங்கள் உங்களுடன் தொடர்பில் இருக்க முடியும். நீங்கள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன் ஆன்லைனில் நிலவரங்களை சரிபார்க்கவும்” என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன், அபுதாபியில் இருந்து இயக்கப்படும் எதிஹாட்டின் அனைத்து விமானங்களும் தற்போது வழக்கம் போல் இயங்குகின்றன எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில் நாட்டில் செவ்வாய்கிழமை வரை மழை மற்றும் பலத்த காற்றுடன் மழை தொடரும், இதன் விளைவாக கிடைமட்டத் தெரிவுநிலை குறையும் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!