அமீரகத்தில் ரமலான் மாதம் எப்போது தொடங்குகிறது?? தொடக்க தேதி குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன..???

இந்த வருடத்திற்கான ரமலான் மாதம் துவங்க இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் சமீபத்திய வானியல் கணக்கீடுகளின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் புனித ரமலான் மாதம் மார்ச் 12 (செவ்வாய்க்கிழமை) அன்று தொடங்கும் என்று வானியல் நிபுணர் ஒருவர் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டு ரமலான் மாதம் முழுவதுமாக 30 நாட்கள் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக ரமலான் மாதம் முடிந்து வரும் ஈத் அல் ஃபித்ருக்கு குடியிருப்பாளர்கள் ஆறு நாட்கள் விடுமுறையை அனுபவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இது குறித்து துபாய் வானியல் குழுமத்தின் செயல்பாட்டு மேலாளர் கதீஜா அஹ்மத் என்பவர் பேசுகையில், இஸ்லாமிய மாதங்கள் பாரம்பரியமாக பிறை பார்ப்பதன் அடிப்படையில் தொடங்கும், அதேபோல, அடுத்த பிறை பார்ப்பதன் மூலம் மாத இறுதி தீர்மானிக்கப்படும் என்று விளக்கமளித்தார். இஸ்லாமிய மாதங்கள் பிறை தென்படுவதைப் பொறுத்து 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறமிருக்க, மார்ச் 10 அன்று நாட்டில் பிறை தென்படும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு கணித்துள்ளது, அவ்வாறு பிறை தென்பட்டால், மார்ச் 11 ரமலானின் முதல் நாளாக இருக்கும். இல்லையெனில், மார்ச் 12 என்பது புனித மாதத்தின் தொடக்கத் தேதியாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஈத் அல் ஃபித்ர் விடுமுறை:
ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்ட விடுமுறை அறிவிப்பின் படி, ஈத் அல் ஃபித்ருக்கு ஏப்ரல் 9 (ரமலான் 29) முதல் ஏப்ரல் 13 (ஷவ்வால் 3) வரை குடியிருப்பாளர்கள் விடுமுறை பெறுவார்கள். இவற்றுடன் ஞாயிற்றுக்கிழமையும் சேர்த்தால் அது ஆறு நாள் விடுமுறையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அமீரகத்தில், புனித மாத தொடக்கத்தில் நோன்பு இருக்கக்கூடிய காலம் தோராயமாக 13 மணி 45 நிமிடங்களில் இருந்து தொடங்கும் என்றும், இது படிப்படியாக அதிகரித்து ரமலான் மாத இறுதியில் சுமார் 14 மணி 25 நிமிடங்களாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரிக்கும் போது பகல் நேரத்தின் நீளம் மாறுவதால் இந்த மாறுபாடு ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel