அமீரக செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர்.. இரங்கல் தெரிவித்த அமீரகத் தலைவர்கள்!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் மோசமான வானிலையால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரென விபத்துக்குள்ளானதில் அவர் உட்பட அவருடன் பயணித்த மற்ற உயர் அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் ஈரானின் அதிபர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரக தலைவர்களும் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளனர்.

அமீரக அதிபர் ஷேக் முகமது அவர்கள், மறைந்த ஈரான் அதிபருக்கு இரங்கல் தெரிவித்து X தளத்தில் பதிவிட்டுள்ளார். ஷேக் முகமது வெளியிட்ட பதிவில், “ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் அவர்களுடன் பயணித்தவர்கள் மறைவிற்காக ஈரானிய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் அவர்களுக்கு நற்கூலியை வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த நேரத்தில் துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கும் தனது இதயப்பூர்வமான அனுதாபங்களை ஷேக் முகமது தெரிவித்துள்ளார். மேலும், அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து துபாய் ஆட்சியாளரும் இரங்கல் தெரிவித்து X தளத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், “ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவரது வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அவர்களுடன் பயணித்து இறந்தவர்களுக்காக ஈரான் மக்களுக்கு எங்கள் இரங்கல் மற்றும் ஆழ்ந்த அனுதாபங்கள்.” என்று எழுதியுள்ளார்.

மேலும், அமீரக துணைத் தலைவர், துணைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி நீதிமன்றத்தின் அமைச்சர் ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும்  “எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன், அவர்கள் கருணையைப் பொழிந்து, அவர்களது குடும்பத்தினருக்கு பொறுமையையும், ஆறுதலையும் தர வேண்டும்” என்று சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஈரான் அதிபர் கிழக்கு அஜர்பைஜானில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திரும்பினார். அப்போது மோசமான வானிலையால் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் சுமார் 16 மணி நேரம் கழித்து அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது.

அதையடுத்து, அந்த நாட்டு அரசு ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோல்லாஹியன் மற்றும் பிற உயரதிகாரிகளும் இறந்ததாக திங்களன்று உறுதிப்படுத்தியது. மோசமான வானிலைக்கு மத்தியில் பறந்த ஹெலிகாப்டர் ஒரு மலை உச்சியில் மோதி விபத்தில் சிக்கியதாக தளத்தில் இருந்து படங்கள் காட்டுகின்றன, இருப்பினும் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!