அமீரக செய்திகள்

கனமழையால் இன்று பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட அமீரகவாசிகள்: போக்குவரத்து தாமதம் உட்பட பல சிக்கல்களை எதிர்கொண்டதாக ஊழியர்கள் தகவல்…..

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளை கனமழை தாக்கியது. இதனைத்தொடர்ந்து, தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு நெகிழ்வான பணி விருப்பங்களை பரிசீலிக்குமாறு ஏற்கெனவே அதிகாரிகள் வலியுறுத்தியிருந்தனர். இந்த நிலையில், சில ஊழியர்கள் மோசமான வானிலைக்கு மத்தியில் இன்று (திங்கள்கிழமை) காலை அலுவலகங்களுக்கு சென்றுள்ளனர்.

மேலும், பல ஊழியர்கள் சாலைகளில் மழை நீர் தேங்கியிருந்ததால் போக்குவரத்து தாமதம் மற்றும் டாக்ஸி கட்டணங்களின் விலை உயர்வு போன்றவற்றையும் எதிர்கொண்டுள்ளனர். இவ்வாறு மோசமான வானிலைக்கு மத்தியில் அலுவலகங்களுக்குச் சென்றவர்கள் முதல், வீட்டிலேயே பணிபுரிந்தவர்கள் வரை பலரும் தங்களின் மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

இது குறித்து அலுவலகங்கள் சென்ற ஊழியர்கள் சிலர் தெரிவிக்கையில் துபாய் மெட்ரோ வழக்கம் போல் இயங்கினாலும் மெட்ரோ நிலையத்திலிருந்து அலுவலகத்திற்கு டாக்ஸியை முன்பதிவு செய்ய சிரமப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இன்னும் சில குடியிருப்பாளர்கள், சில சாலைகள் மூடப்பட்டிருந்ததால், வழக்கமான டாக்ஸி முன்பதிவு கட்டணம் 12 திர்ஹம்களில் இருந்து 36 மற்றும் 45 திர்ஹம்களாக மூன்று மடங்குகளுக்கு மேல் உயர்ந்திருந்ததாக கூறியுள்ளனர்.

குறிப்பாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சில வாகன ஓட்டிகள் பல மணி நேரம் சாலையில் நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில், அல் பர்ஷாவிலிருந்து ஜுமைரா மதீனாத் நோக்கிச் செல்லும் சாலை நீச்சல் குளம் போல் காட்சியளித்ததாகவும், வெள்ளம் காரணமாக ஐந்து வழிச்சாலைகள் ஒன்றாக குறைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்ட வானிலை அறிக்கையின் படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இரவு வரை மோசமான வானிலை நீடிக்கும் என்பதால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் நாளை மதியம் முதல் வெப்பச்சலன மேகங்கள் குறையும் என்றும் இரவில் மழைக்கான வாய்ப்பு குறைவு என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!