அமீரக செய்திகள்

விமான பயணிகளுக்கு நற்செய்தி.. 40 கிலோ பேக்கேஜ் அலவன்ஸை அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.. மலிவான கட்டணமும் அறிமுகம்..!!

இந்தியாவின் பட்ஜெட் கேரியர் விமான நிறுவனமான ​​ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அதன் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தைச் சேமிக்கும் வகையில் மலிவான டிக்கெட்டுகளுடன் புதிய கட்டண வகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் புதிய கட்டண வகைகளின் கீழ் 40 கிலோ வரை கூடுதல் பேக்கேஜ் அலவன்ஸ் முதல் செக்-இன் லக்கேஜ் இல்லாத பயணம் என நான்கு விருப்பத்தை பயணிகளுக்கு வழங்குகிறது.

UAE மற்றும் பிற சர்வதேச இடங்களுக்குச் செல்லும் விமானங்களுக்குப் பொருந்தும் புதிய கட்டண வகைகள்:

  • எக்ஸ்பிரஸ் லைட் (Xpress Lite)
  • எக்ஸ்பிரஸ் வேல்யூ (Xpress Value)
  • எக்ஸ்பிரஸ் ஃப்ளெக்ஸ் (Xpress Flex)
  • எக்ஸ்பிரஸ் பிஸ் (Xpress Biz)

எக்ஸ்பிரஸ் லைட்: இந்த வகையில் கேபின் பேக்கேஜ்-மட்டும் (cabin baggage-only) கொண்டு செல்லும் பயணிகளுக்கு பிரத்யேக கட்டணத்தை வழங்குகிறது. இது மற்ற வகைகளை விடவும் மலிவானதாக இருக்கும் என்பதனால், பயணிகள் குறிப்பிட்ட தொகையை மிச்சப்படுத்தலாம்.

எக்ஸ்பிரஸ் வேல்யூ: இந்த வகையானது பயணிகளுக்கு 15 கிலோ செக்-இன் பேக்கேஜ் கட்டணத்தை அனுமதிக்கிறது. எனவே குறைவான பொருட்களை எடுத்து செல்லும் பயணிகள் முழு கட்டணத்தை செலுத்த தேவையின்றி, சிறிது பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

எக்ஸ்பிரஸ் ஃப்ளெக்ஸ்: அதே நேரத்தில் எக்ஸ்பிரஸ் ஃப்ளெக்ஸ் வகையானது வழக்கம்போல் வரம்பற்ற மாற்றங்களை (unlimited changes) மேற்கொள்ள எந்தவித கூடுதல் கட்டணமும் (change fees) இல்லாமல் பயணிகளுக்கு வழங்குகிறது.

எக்ஸ்பிரஸ் பிஸ்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கும் இந்த கட்டண வகைகளில் தற்போது கூடுதலாக எக்ஸ்பிரஸ் பிஸ் எனும் புதிய வகையும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வகையின் கீழ் வணிக வகுப்பு இருக்கைகள், காம்ப்ளிமென்ட்ரி உணவுகள் மற்றும் முன்னுரிமை சேவைகள் பயணிகளுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவின் துணை நிறுவனமும், டாடா குழுமத்தின் ஒரு பகுதியுமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், செக்-இன் பேக்கேஜ் எதுவும் இல்லாமல் பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்காக பிப்ரவரி 20ம் அன்று எக்ஸ்பிரஸ் லைட்டை அறிமுகப்படுத்தியது.

 

இது பற்றி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் நிர்வாக இயக்குனர் அலோக் சிங் பேசுகையில், ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகுடா பிராந்தியத்திற்கான திறனை அதிகரிக்கவும், வளைகுடா பயணிகளுக்கு சிறந்த இணைப்பை வழங்கவும் எங்கள் விமான நிறுவனம் முயற்சி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

40 கிலோ பேக்கேஜ் அலவன்ஸ்

மேலும், அனைத்து புதிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737-8 விமானங்களிலும் எக்ஸ்பிரஸ் பிஸ் கட்டணங்கள் கிடைக்கும். எக்ஸ்பிரஸ் பிஸ் கட்டணத்தை முன்பதிவு செய்யும் போது, ​​உள்நாட்டு விமானங்களுக்கு 25 கிலோ மற்றும் சர்வதேச விமானங்களுக்கு 40 கிலோ எடையுள்ள பேக்கேஜ் அலவன்ஸ்களை பயணிகள் அனுபவிக்கலாம். அத்துடன் இந்த கட்டணம் முன்னுரிமை செக்-இன், பேக்கேஜ் மற்றும் போர்டிங் சேவைகளையும் வழங்குவதாக கூறியுள்ளார்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏற்கனவே இந்தியாவில் 70-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் எக்ஸ்பிரஸ் பிஸ் இருக்கைகளுடன் விமானங்களை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது UAE-இந்தியா இடையே வாரத்திற்கு 195 விமானங்களை இயக்குவதாகவும், வளைகுடா பகுதி முழுவதும் வாரத்திற்கு 308 விமானங்களை இயக்குவதாகவும் கூறப்படுகிறது.

அமீரகத்திற்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை:

  • துபாய்- 80
  • ஷார்ஜா- 77
  • அபுதாபி- 31
  • ராஸ் அல் கைமா- 5
  • அல் அய்ன்- 2

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் வெளிநாட்டவர்களில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் இருப்பதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகவும் பரபரப்பான விமான வழித்தடங்களில் ஒன்றாக அமீரகம் இருப்பதாகவும், இதனால் UAE-இந்தியா விமானப் பயணத் துறையில் போட்டி சூடுபிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கூடுதலாக, அமீரகத்தை தளமாக கொண்ட முதன்மையான விமான கேரியர்களான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நகரங்களுக்கு வலுவான இணைப்பை வழங்குவதும், பல இந்தியர்கள் அமீரக விமான நிறுவனங்களில் பயணிக்க முக்கிய காரணமாகவும் உள்ளது.

முன்னதாக பிப்ரவரியில், எமிரேட்ஸ் VFS குளோபல் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த கூட்டாண்மை விமான நிறுவனத்தில் தங்கள் பயணத்தை முன்பதிவு செய்துள்ள இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு முன்-அங்கீகரிக்கப்பட்ட விசா-ஆன்-அரைவல் வசதியை அறிமுகப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!