அமீரக செய்திகள்

துபாயில் பிச்சை எடுக்க விசிட் விசா எடுத்து வந்த ஆசாமிகள்.. 202 பேரை மடக்கி பிடித்த காவல்துறையினர்..!!

புனித ரமலான் மாதத்தில் மக்களை ஏமாற்றி பிச்சை எடுக்கும் கும்பல்களுக்கு எதிரான பிரச்சாரத்தை துபாய் காவல்துறையினர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக தொடங்கியிருந்தனர். இந்நிலையில் இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ரமலானின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 202 பிச்சைக்காரர்களை துபாய் காவல்துறை கைது செய்துள்ளனர். மேலும் கைதானவர்களில் 112 பேர் ஆண்கள் மற்றும் 90 பேர் பெண்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து துபாய் காவல்துறையின் சந்தேக நபர்கள் மற்றும் குற்றவியல் நிகழ்வுகள் துறையின் (Suspects and Criminal Phenomena Department) இயக்குனர் பிரிக்கேடியர் அலி சலேம் அல் ஷம்சி (Brig Ali Salem Al Shamsi) கூறுகையில், காவல்துறையிடம் பிடிபட்ட பெரும்பாலான பிச்சைக்காரர்கள் மக்களின் இரக்க குணத்தையும் தாராள மனப்பான்மையையும் தவறாகப் பயன்படுத்தி விரைவாக பணம் சம்பாதிப்பதற்காக விசிட் விசாவில் எமிரேட்டிற்குள் நுழைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆகவே, வீதிகளில் ஆங்காங்கே பிச்சை கேட்கும் பிச்சைக்காரர்களிடம் குடியிருப்பாளர்கள் பரிதாபம் காட்ட வேண்டாம் என்றும், கருணையோடு பணத்தை வழங்கி ஏமாற வேண்டாம் என்றும் அல் ஷம்சி பொதுமக்களை கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், புனித மாதத்தில் ஏழை எளியோருக்கு நன்கொடை மற்றும் தானம் செய்ய விரும்பும் மக்கள் பதிவுசெய்யப்பட்ட மற்றும் முறையான தொண்டு நிறுவனங்கள் மூலம் தங்கள் பங்களிப்புகளை வழங்கலாம், இது சந்தேகத்திற்குரிய நபர்களையோ குழுக்களையோ சேராமல், தேவைப்படுபவர்களை சரியாகச் சென்றடைவதை உறுதிசெய்யும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேசமயம், துபாய் காவல்துறையின் ஸ்மார்ட் செயலியில் உள்ள ‘Police Eye’ சேவையைப் பயன்படுத்தியோ அல்லது 901 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ பிச்சை எடுப்பது போன்ற சட்டவிரோதச் செயல்களை புகாரளிக்குமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

துபாயை சுற்றிப்பார்க்க வந்து தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்ட இந்த ஆசாமிகளுக்கு குறைந்தபட்சம் 5,000 திர்ஹம் அபராதமும் மற்றும் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன், எமிரேட்டில் பிச்சை எடுக்க வெளிநாட்டில் இருந்து தனி நபர்களை அழைத்து வருபவர்களுக்கும், பிச்சை எடுக்கும் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்பவர்களுக்கும் குறைந்தபட்சம் ஆறு மாதம் சிறைத்தண்டனையும், கூடவே 100,000 திர்ஹம்களுக்கு குறையாத அபராதமும் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!