அமீரக செய்திகள்

துபாயின் முக்கிய சாலையில் திடீரென டெலிவரி ரைடர் செய்த காரியம்.. நேரில் அழைத்து கௌரவித்த RTA..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான தலாபத்தின் (Talabat) டெலிவரி ரைடர் ஒருவர், சாலையில் ஆபத்து விளைவிக்கும் வகையில் தொங்கிக் கொண்டிருந்த போக்குவரத்து விளக்கை உடனடியாக சரி செய்து சமூக அக்கறையை வெளிப்படுத்தியதால் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அவருக்குச் சான்றிதழ் வழங்கி கௌரவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜீஷான் அகமது (Zeeshan Ahmed) என்ற டெலிவரி ரைடர், துபாயின் அல் வாஸ்ல் ஸ்ட்ரீட்டில் (Al Wasl Street) இருந்த சிக்னல் உடைந்து தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும் விரைந்து சென்று விளக்கை சரிசெய்து ஆபத்தை தடுத்துள்ளார். இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும், அவரது இந்த சேவை அங்கிருந்த CCTV கேமரா ஒன்றில் பதிவாகியிருந்ததால், இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, தலாபத் நிர்வாகத்திடம் இருந்து ஜீஷனுக்கு அழைப்பு வந்துள்ளது.

அப்போது, போக்குவரத்து விளக்கைச் சரிசெய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோவை RTA அதிகாரிகள் பெற்றதாகவும், அதனால் RTA தரப்பில் கௌரவிக்க விரும்புவதால் தொடர்பு விபரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் தலாபத் நிர்வாகத்தினர் ஜீஷனிடம் கோரியுள்ளனர்.

எனவே, அவர்களிடம் தனது தொடர்பு விபரங்களைப் பகிர்ந்து கொண்டதாகத் தெரிவித்த ஜீஷன், அதிகாரிகள் தன்னை RTA தலைமையகத்திற்கு அழைத்ததாகவும், அங்கு அவரது சேவைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்ததுடன் அனைவரும் ஒரு சகோதரனைப் போல நடத்தியதாகவும் கூறியுள்ளார்.

அமீரகத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக டெலிவரி ரைடராக பணிபுரியும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜீஷன், துபாய் அரசாங்கம் தனக்கு அளித்த அங்கீகாரத்திற்காக நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று கூறியதுடன், நான் துபாயை மிகவும் நேசிக்கிறேன், இது பூமியின் மிக அழகான நகரம், அது எனக்கு நிறைய கொடுத்துள்ளது. எனவே இந்த நகரத்தை அழகாக வைத்திருக்க ஒவ்வொருவரும் களமிறங்குவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும், நாங்கள் டெலிவரி ரைடர்கள் எப்போதும் சாலையில் இருக்கிறோம் மற்றும் நிறைய பேர் சென்றடையாத இடங்களை நாங்கள் அடைகிறோம். எனவே, இயன்றவரை உதவுவது நமது கடமை என நான் நினைக்கிறேன் என்றும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

மேலும், அவர் தனக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்த செய்தியை தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டதாகவும், அவர்கள் ஜீஷனுக்கு கிடைத்த அங்கீகாரத்தை விட, ரமலான் மாதத்தில் அவர் செய்த நல்ல காரியத்தை எண்ணி மகிழ்ச்சியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!