அமீரக செய்திகள்

UAE: உங்கள் சான்றிதழ்களுக்கான MoFA முத்திரையை ஆன்லைனிலேயே பெறுவது எப்படி..?? எளிதான படிகள் இங்கே..

ஐக்கிய அரபு அமீரகத்தில் நீங்கள் புதிதாக வேலையில் சேர்ந்திருந்தாலும் அல்லது ஒரு குழந்தையை பெற்றிருந்தாலும், அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகத்தால் (MoFA) சான்றளிக்கப்பட்ட ஆவணத்தை (attested document) நீங்கள் சம்பந்தபட்ட அதிகாரத்திற்கு கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

இது தவிர, நாம் படித்த படிப்பிற்கான டிகிரி, டிப்ளோமாக்கள் மற்றும் பதிவுகளின் டிரான்ஸ்கிரிப்ட், பிறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் வேலை ஒப்பந்தங்கள் போன்ற ஆவணங்களுக்கும் அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றொப்பம் (attestation) தேவைப்படுகிறது.

அதாவது, அமீரகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வழங்கப்படும் இவ்வாறான சான்றிதழ்கள் அமீரகத்திற்குள் செல்லுபடியாகும் எனக் கருதுவதற்கு வெளியுறவு அமைச்சகத்தின் முத்திரை அவசியம். ஆகவே, குடியிருப்பாளர்கள் தங்களின் ஆவணங்களை சான்றளிக்க இதற்கு முன்பு MoFA மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது.

ஆனால், தற்போது சான்றழிக்கும் இந்த சேவையை பெற நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லாமல், ஆன்லைன் மூலமே முடிப்பதற்கான வசதியை வெளியுறவு அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. MoFAவின்  இந்த வசதியை ஆன்லைன் தளம் வழியாக எப்படி பெறுவது என்பதற்கான படிப்படியான வழிகாட்டி பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

படி 1: விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கு முன், உங்கள் சான்றிதழ் பின்வரும் தேவைகளைப் பூர்த்திசெய்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும்:

>> இது ஆங்கிலம் அல்லது அரபு மொழியில் அசல் ஆவணமாக இருக்க வேண்டும், அல்லது அதன் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாக இருக்க வேண்டும்.

>> சமர்ப்பிப்பதற்கு முன் உரிய நிர்வாகக் குழுக்களால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும். சான்றிதழ் வெளிநாட்டில் வழங்கப்பட்டிருந்தால், அது UAE தூதரகம் அல்லது துணைத் தூதரகம் அல்லது அமீரகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு தூதரகத்தால் முத்திரையிடப்பட்டிருக்க வேண்டும்.

>> இது லேமினேட் செய்யப்பட்ட ஆவணமாக இருக்க கூடாது.

படி 2: முதலில் MoFA இணையதளத்தில் (www.mofa.gov.ae) உங்களின் UAE பாஸ் மூலம் உள்நுழைய வேண்டும். இல்லையெனில், நீங்கள் புதிதாக பதிவு செய்ய வேண்டும்.

படி 3: உள்நுழைந்ததும், ‘Services’ என்பதன் கீழ், ‘Services for Individuals’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும், இது உங்களை  ‘Documents Attestation’ விருப்பத்திற்கு அழைத்துச் செல்லும்.

படி 4: அதன்பிறகு, நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணம், அதன் பிறப்பிடமான நாடு உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். நீங்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சான்றிதழ்களுக்கும் சான்றொப்பம் பெறலாம். பின்னர் ​​உங்களுக்கு விருப்பமான கூரியர் சேவையைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கப்படுவீர்கள்.

படி 5: ஒவ்வொரு ஆவணத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உங்கள் கட்டணத்தை கிரெடிட் கார்டு, நேரடி டெபிட் கார்டு, சாம்சங் பே அல்லது ஆப்பிள் பே மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.

நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வழங்கப்பட்ட தனிப்பட்ட சான்றிதழ்களின் சான்றளிப்பு கட்டணமாக ஒரு ஆவணத்திற்கு 150 திர்ஹம் செலவாகும். இருப்பினும், வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஆவணங்கள், நிறுவனங்களை அமைக்கும் ஒப்பந்தங்கள் மற்றும் வணிக உரிமங்கள் போன்றவற்றிற்கு 2,000 திர்ஹம்ஸ் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

படி 6: குறிப்பிட்ட நேரம் மற்றும் இடத்தில் MoFA முத்திரையிடப்பட வேண்டிய உங்கள் ஆவணத்தை கூரியரிடம் (courier) ஒப்படைக்கவும்.

படி 7: இறுதியாக, நீங்கள் சமர்ப்பித்த ஆவணத்தில் எந்தச் சிக்கலும் இல்லை என்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட கூரியர் சேவையைப் பொறுத்து மூன்று நாட்களில் MoFA முத்திரையுடன் அதைத் திரும்பப் பெறுவீர்கள். ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்புடன் அது உங்களுக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!