அமீரக செய்திகள்

துபாயில் வாடகைக் காரை பயன்படுத்துபவரா.? வாடகைக் கார் தொடர்பாக புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ள அரசு..!!

அமீரகத்தில் சொந்தமாக கார் வாங்க வசதி இல்லாதவர்கள் மற்றும் அமீரகத்திற்கு சுற்றுலா வருபவர்கள் என பெரும்பாலானோர் குறிப்பிட்ட காலத்திற்கு காரை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருவது பரவலாகவே வழக்கமான ஒரு செயலாகும். ‘Rent A Car’ என்று சொல்லக்கூடிய வாடகைக்கு கார் எடுக்கும் இந்த நிறுவனங்களாது அமீரகம் முழுவதும் காணப்படுகின்றது.

அவ்வாறு காரை வாடகைக்கு எடுக்கும் போது வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்பொழுது, பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் கீழ் செயல்படும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கான துபாய் கார்ப்பரேஷன் இது தொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், எமிரேட்டில் உள்ள அனைத்து கார் வாடகை நிறுவனங்களும் கார் வாடகை தொடர்பான சட்டங்கள், நிபந்தனைகள் மற்றும் செக்யூரிட்டி டெபாசிட் தொடர்பான புதிய நடைமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, வாடிக்கையாளர்களிடம் இருந்து வாகனத்தை திரும்பப் பெற்ற 30 நாட்களுக்குள் கார் வாடகை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும் மற்றும் கிரெடிட் கார்டுகளை விடுவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், கார் வாடகை நிறுவனம் டெபாசிட் தொகையை ரொக்கமாகவோ அல்லது வாடிக்கையாளரின் டெபிட் கார்டில் இருந்தோ பெற வேண்டும் என்றும், எந்த சூழலிலும் கிரெடிட் கார்டை கட்டணத்தை பெறுவதற்கான கொள்முதல் பரிவர்த்தனையாக (purchase transaction) வைத்திருக்கக்கூடாது என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து துபாயில் உள்ள பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநர் அஹ்மத் அலி மௌசா கூறுகையில், துபாயில் கார் வாடகைக்கு எடுப்பவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், அனைத்து கார் வாடகை அலுவலகங்களின் நலனை மேம்படுத்துவதுமே இந்த சுற்றறிக்கையின் நோக்கமாகும் என்று எடுத்துரைத்துள்ளார்.

மேலும் அவர் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கார் வாடகை நிறுவனங்கள் செக்யூரிட்டி டெபாசிட் தொகையை நிறுத்தி வைக்க வேண்டும். கிரெடிட் கார்டில் கொள்முதல் பரிவர்த்தனை (purchase transaction) செய்யக்கூடாது. அவர்கள் பணத்தை எடுத்துக் கொண்டால், வங்கி பரிமாற்றம் அல்லது எக்ஸ்சேஞ்ச் மூலம் டெபாசிட் பணத்தை வாடிக்கையாளர்கள் திரும்பப் பெறுவதற்கு நிறுவனங்களே பொறுப்பாகும், மற்றும் பரிமாற்றத்திற்கான கட்டணம் கார் வாடகை அலுவலகத்திற்கு பொருந்தும்” என்பதை வலியுறுத்தியுள்ளார்.

2024 ஆம் ஆண்டிற்கான சுற்றறிக்கை எண். (1) இன் படி, வாடிக்கையாளர் செக்யூரிட்டி டெபாசிட் தொகையை பணமாகவோ அல்லது டெபிட் கார்டு மூலமாகவோ செலுத்தியிருந்தால், கார் வாடகை நிறுவனம் அந்த டெபாசிட் தொகையை பணமாகவோ அல்லது வயர்டு ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் மூலமாகவோ திருப்பிச் செலுத்தும் என்றும், கார் வாடகை நிறுவனமே பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணத்தை ஏற்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், காரை வாடகைக்கு எடுப்பவர் ஏதேனும் போக்குவரத்து குற்றங்கள் மற்றும் வாகனத்தில் சேதம் ஏற்படுத்தினால் அவற்றை ஈடுசெய்ய வாடிக்கையாளர் செலுத்தும் செக்யூரிட்டி டெபாசிட் தொகையிலிருந்து பணத்தை கழிக்க கார் வாடகை நிறுவனத்திற்கு அனுமதி உண்டு என்பதையும் அந்த சுற்றறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

முக்கியமாக, கிரெடிட் கார்டுகள் அல்லது பணம் செலுத்தும் விண்ணப்பங்களைப் பயன்படுத்துவதற்கு பரிவர்த்தனை கட்டணத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது முக்கியமானதாகும்.

அத்துடன் கார் வாடகை நிறுவனங்கள் நிர்வாகக் கட்டணங்களைத் தவிர கூடுதல் கட்டணங்களை எடுக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அதேசமயம் காரை கழுவ வேண்டிய நிர்பந்தம் இருந்தால் அதற்காக அந்நிறுவனம் சுமார் 50-60 திர்ஹம்ஸ் வரை வாஷிங் தொகையும், சாலிக் கட்டணம் ஏதும் இருந்தால் அதனையும் டெபாசிட் கட்டணத்தில் வசூலிக்கலாம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!