அமீரக செய்திகள்

UAE: ரமலான் மாதத்தில் அதிகளவு சாலை விபத்துகள் ஏற்படும் நேரங்களை வெளியிட்டு வாகன ஓட்டிகளுக்கு RTA வழங்கிய டிப்ஸ்!!

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள அலுவலகங்களிலும் பள்ளிகளிலும் புனித ரமலான் மாதத்தினை முன்னிட்டு அவற்றின் இயக்க நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, நோன்பு காலத்தில் சாலைகளில் போக்குவரத்து உச்சம் பெறும் நேரங்கள் மற்ற மாதங்களில் இருந்து மாறுபடுகிறது.

துபாயைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனம், கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் விபத்துக் கோரிக்கைகளை ஆய்வு செய்ததில், ரமலானின் போது அமீரக சாலைகளில் பதிவான பெரும்பாலான விபத்துக்கள் மதியம் 1 மணி முதல் 4 மணி வரை என்பதைக் கண்டறிந்துள்ளது. குறிப்பாக, வாரநாட்களில் புதன்கிழமைகள் மிகவும் ஆபத்தானவை என்றும், அதே நேரத்தில் வார இறுதி நாட்கள் சாலைப் பயணிகளுக்கு பாதுகாப்பானவை என்றும் தெரிவித்துள்ளது.

சாலைப் பயனர்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, காப்பீட்டு வழங்குனரான டோக்கியோ மரைன் (Tokio Marine) மற்றும் ரோட் சேஃப்டியூஏஇ (RoadSafetyUAE) ஆகிய நிறுவனங்கள் மார்ச் 22, 2023 முதல் ஏப்ரல் 20, 2023 வரையிலான 1,320 மோட்டார் இன்சூரன்ஸ் க்ளைம்களை கூட்டாக ஆய்வு செய்துள்ளன. ஆகவே ரமலான் காலத்தில் மற்ற ஓட்டுனர்களின் நடத்தை குறித்து வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, நோன்பு காலத்தில் ஏற்படும் குறிப்பிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் நூற்றுக்கணக்கான விபத்துகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று காப்பீட்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதிகம் விபத்து நடக்கும் நேரம்:

இது குறித்து வெளியான புள்ளிவிபரங்களின் படி, பகல் நேரத்தில் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரையிலான அதிகபட்ச விபத்தாக 35 சதவீத சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்றும், அதைத் தொடர்ந்து காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 21 சதவீதம் விபத்துகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாரநாட்களில் புதன்கிழமைகளில் 19 சதவிகிதம் விபத்து பதிவாகியிருப்பதால் அது மிகவும் ஆபத்தான வேலை நாளாகக் கருதப்படுகிறது. அதைத் தொடர்ந்து, திங்கள் மற்றும் வியாழன் இரண்டும் 16 சதவிகிதம், செவ்வாய் கிழமைகளில் 15 சதவிகிதம், வெள்ளிக்கிழமை 13 சதவிகிதமாக விபத்துகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முறையே 12 மற்றும் 9 சதவீதம் எனக் குறைவாகவே உள்ளன.

கூடுதலாக, 30-39 வயதுடைய வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், அதைத் தொடர்ந்து 40-49 வயதிற்குட்பட்டவர்களும் பாதிக்கப்படுவதாகவும் இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இது பற்றி டோக்கியோ மரைனில் நேரடி வணிகம் மற்றும் சந்தைப்படுத்தல் மூத்த மேலாளரான Takako Matsuo பேசுகையில், நோன்பு இருப்பவர்களின் உடலில் நீரிழப்பு ஏற்படுவதுடன் இரத்தச் சர்க்கரை அளவு குறையும், இது ஓட்டுநர்களின் கவனம், திறன், பார்வை ஆகியவற்றை பாதிக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல், ஒழுங்கற்ற உணவு நேரங்கள் மற்றும் தூக்க முறைகளும் சோர்வு, பொறுமையின்மை மற்றும் கவனச்சிதறல் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன, இது அதிகாலை விபத்து ஏற்பட வாய்ப்பாக அமைகிறது என்றும் விவரித்துள்ளார்.

ரமலான் காலத்தில் பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் உள்ளிட்ட அனைத்து சாலைப் பயனர்களும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று RoadSafetyUAE இன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் தாமஸ் எடெல்மேன் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

சாலையில் பாதுகாப்பாக இருப்பதற்கு RoadSafetyUAE பகிர்ந்துள்ள உதவிக்குறிப்புகள்:

  • சாலைகளில் உங்கள் வரம்புகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்
  • வாகனம் ஓட்டும் போது எதிர்பாராமல் விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதால் தற்காப்புடன் ஓட்டுங்கள்
  • சாத்தியமான தாமதங்களைத் திட்டமிட்டு, அதற்கான நேரத்தையும் சேர்த்து அதிக நேரம் வாகனம் ஓட்ட ஒதுக்க வேண்டும்
  • எப்போதும் உங்கள் சீட் பெல்ட்டை அணிந்திருக்க வேண்டும்
  • காலை நேர நெரிசலில் கவனமாக இருக்க வேண்டும்
  • முடிந்தவரை, சூரியன் மறையும் நேரங்களில் சாலைகளில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்
  • மற்ற வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும் போது ஏற்படுத்தும் திடீர் மாற்றங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
  • வாகனங்களுக்கு இடையே போதுமான தூரத்தை பின்பற்ற வேண்டும் மற்றும் டெயில்கேட் (tailgate) செய்ய வேண்டாம்
  • சோர்வைத் தவிர்த்து, போதுமான தூக்கத்தைப் பெற வேண்டும்
  • பொது போக்குவரத்து அல்லது டாக்ஸிகளைப் பயன்படுத்தவும்

இதற்கிடையில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ரமலானின் போது சோர்வாக அல்லது தூக்கத்தில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு, RTA அதன் போக்குவரத்து பாதுகாப்பு உத்தியின் ஒரு பகுதியாக, ‘ஒவ்வொரு மனித வாழ்க்கையும் தனித்துவமானது மற்றும் ஈடுசெய்ய முடியாதது’ என்ற கொள்கையின் அடிப்படையில் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தியது. இந்த நடவடிக்கைகள் மூலம்,  2007 முதல் 2023 வரை போக்குவரத்து தொடர்பான இறப்புகளை தோராயமாக 93 சதவீதம் குறைத்ததாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

ரமலான் மாதத்திற்காக RTA வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள்: 

  1. அதிக உணவை உட்கொண்டவுடன், குறிப்பாக நோன்புக்குப் பிறகு உடனடியாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும்.
  2. ரமலான் மாதத்தில் வாகனம் ஓட்டும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும், முன்னால் செல்லும் வாகனத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தைக் கடைபிடிக்கவும்.
  3. வாகனம் ஓட்டும் போது மன அழுத்தத்தைத் தவிர்க்க பயணத்திற்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குவதன் மூலம் நெரிசலை எதிர்பார்க்கலாம்.
  4. போக்குவரத்து விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகளுடன் தகராறில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்; உங்கள் பாதையில் கவனம் செலுத்துங்கள்.
  5. அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டு, மூடப்பட்ட இடங்களில் ஏர் கண்டிஷனிங் ஆன் செய்யப்பட்ட காரில் தூங்குவது ஒரு மணி நேரத்திற்குள் மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  6. நோன்பு உங்கள் திறனை கணிசமாகப் பாதித்தால் அல்லது உங்கள் மன அழுத்தத்தை அதிகரித்தால், பொதுப் போக்குவரத்தைத் தேர்ந்தெடுப்பது பாதுகாப்பான வழியாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!