அமீரக செய்திகள்

துபாயின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்தை 40-70% குறைக்கும் 4 புதிய பாலங்கள்.. 75% பணிகள் முடிந்ததாக RTA ட்வீட்..!!

துபாயில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், சாலைகளில் சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்யவும், பயண நேரத்தை மிச்சப்படுத்தவும் எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், துபாயின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதையும், பயண நேரத்தைக் கணிசமாகக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு புதிதாக கட்டப்பட்டு வரும் நான்கு பாலங்களின் கட்டுமானப் பணிகள் தற்போது 75 சதவீதம் வரை முடிக்கப்பட்டுள்ளதாக RTA அறிவித்துள்ளது.

துபாய், ஷார்ஜா, அஜ்மான் மற்றும் பிற எமிரேட்களுக்கு பயணிக்கும் குடியிருப்பாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஷேக் முகமது பின் சையத் சாலையின் இன்டெர்செக்சனில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் நான்கு பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.

இதுவரை பாலங்களின் அஸ்திவாரங்கள் மற்றும் தூண்களின் கட்டுமானம் முடிந்து விட்டதாகவும், தற்போது பாலத்தின் சுவர்கள் பதித்தல், இரும்பு கம்பிகளை நிறுவுதல், சாலைகளை விரிவுபடுத்துதல், விளக்குகள் நிறுவுதல், மழைநீர் வடிகால் மற்றும் கட்டுமானத்தை முடிக்க தேவையான போக்குவரத்து மாற்றங்களைச் செய்தல் போன்ற வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் RTA கூறியுள்ளது.

மேலும் இது மொத்தம் 2,874 மீட்டர் நீளத்தில் ஒரு மணி நேரத்திற்கு 17,600 வாகனங்கள் போக்குவரத்து திறனைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குள் இதன் முக்கிய பாலங்களில் ஒன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துபாயின் தற்போதைய நகர்ப்புற மற்றும் மக்கள்தொகை வளர்ச்சியை கருத்தில்கொண்டு, போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ள நகரின் சாலை நெட்வொர்க் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும் மற்றும் துபாய் ஆட்சியாளருமான மான்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் துபாய் பட்டத்து இளவரசரும், நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீரான போக்குவரத்து ஓட்டம்

இத்திட்டத்தின் மூலம், ஷேக் சையத் சாலை மற்றும் ஷேக் முகமது பின் சையத் சாலையை இணைக்கும் முக்கியமான திட்டமான கார்ன் அல் சப்கா ஸ்ட்ரீட்டை மேம்படுத்துவதே நோக்கமாகும். இது ஷேக் சையத் சாலை, ஷேக் முகமது பின் சையத் சாலை, ஃபர்ஸ்ட் அல் கைல் சாலை மற்றும் அல் அசயேல் ஸ்ட்ரீட் இடையே தடையற்ற போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்யும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இந்த திட்டம் முடிக்கப்பட்டதும், கார்ன் அல் சப்கா ஸ்ட்ரீட்டில் இருந்து ஷேக் முகமது பின் சையத் சாலைக்கு அல் குசைஸ் மற்றும் தேராவை நோக்கி செல்லும் போக்குவரத்துக்கான தூரத்தையும் பயண நேரத்தையும் 40 சதவீதம் குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இது பீக் ஹவர் பயண நேரத்தை 20 நிமிடங்களில் இருந்து 12 நிமிடங்களாக குறைக்கும் என்றும், குறிப்பாக ஷேக் முகமது பின் சையத் சாலையில் இருந்து வலதுபுறமாக அல் யலாயிஸ் ஸ்ட்ரீட்டுக்கு ஜெபல் அலி துறைமுகம் நோக்கி செல்லும் போக்குவரத்தின் பயண நேரம் 21 நிமிடங்களில் இருந்து 7 நிமிடங்களாக அதாவது 70 சதவீதம் குறையும் என்றும் RTA நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர், டைரக்டர் ஜெனரல் மேட்டர் அல் டேயர் கூறியுள்ளார்.

நான்கு புதிய பாலங்கள்:

பாலம் 1: கார்ன் அல் சப்கா ஸ்ட்ரீட் (Garn Al Sabkha Street) மற்றும் அல் அசயேல் ஸ்ட்ரீட் (Al Assayel Street) சந்திப்பில் 943 மீட்டர் நீளத்திற்கு கட்டப்படும் இருவழிப் பாலம், ஒவ்வொரு திசையிலும் ஒரு மணி நேரத்திற்கு 8,000 வாகனங்கள் செல்ல அனுமதிப்பதுடன் ஷேக் சையத் சாலை (Sheikh Zayed Road) மற்றும் ஷேக் முகமது பின் சையத் சாலை (Sheikh Mohammed bin Zayed Road) இடையேயான போக்குவரத்து ஓட்டத்தை எளிதாக்குகிறது.

பாலம் 2: இரண்டு பாதைகளைக் கொண்ட இரண்டாவது பாலம், 601 மீட்டர் நீளம் கொண்டது. இது கார்ன் அல் சப்கா ஸ்ட்ரீட் கிழக்கிலிருந்து ஷேக் முகமது பின் சையத் சாலையின் திசையிலும், வடக்கு அல் குசைஸ் (Al Qusais) மற்றும் தேராவை (Deira) நோக்கி செல்லும் போக்குவரத்துக்கு சேவை செய்கிறது. இந்த பாலம் ஒரு மணி நேரத்திற்கு 3,200 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது.

பாலம் 3: மூன்றாவதாக 664 மீட்டர் நீளமுள்ள இருவழிப் பாலம், ஒரு மணி நேரத்திற்கு சுமார் 3,200 வாகனங்களை அனுமதிக்கும் திறன் கொண்டது. இது ஷேக் முகமது பின் சையத் சாலையிலிருந்து வடக்கே அல் யாலாயிஸ் தெரு (Al Yalayis Street) வரை ஜெபல் அலி துறைமுகத்தின் (Jabel Ali Port) திசையில் செல்லும் போக்குவரத்து நெரிசலை நீக்குவதன் மூலம் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.

பாலம் 4:  666 மீட்டர் நீளத்திற்கு இருவழிகளைக் கொண்டுள்ள நான்காவது பாலம், ஷேக் முகமது பின் சையத் சாலையிலிருந்து துபாய் ப்ரொடக்சன் சிட்டியின் (Dubai Protection City) நுழைவாயில்களுக்குச் செல்லும் சர்வீஸ் சாலை வரையிலான போக்குவரத்து நெரிசலை நீக்கி, சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்கிறது. இந்த பாலத்தில் ஒரு மணி நேரத்திற்கு 3,200 வாகனங்கள் வரை செல்லலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!