அமீரக செய்திகள்

கோடைகாலத்தை முன்னிட்டு விரைவில் மூடப்படவுள்ள துபாயின் பிரபலமான மூன்று இடங்கள்..!!

துபாயில் சிறந்த வெளிப்புற அனுபவத்தைப் பெறவும் அன்புக்குரியவர்களுடன் ஓய்வு நேரத்தை செலவிடவும் பிரபலமான பல்வேறு ஈர்ப்புகள் உள்ளன. இருப்பினும், சில பொழுதுபோக்கு வசதிகள் கோடைகாலம் தொடங்கி விட்டதால் அதன் கதவுகளை விரைவில் மூடுவதற்குத் திட்டமிட்டுள்ளன.

அவ்வாறு மூடப்படுவதற்கு முன், எஞ்சியிருக்கும் விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி துபாயில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் சேர்ந்து நீங்கள் அனுபவிக்க வேண்டிய முக்கியமான மூன்று இடங்கள் பற்றிய விபரங்களை இங்கே காணலாம்.

1. குளோபல் வில்லேஜ்:

துபாயில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும், நாட்டின் மிகவும் பிரபலமான பன்முகக் கலாச்சார குடும்ப இலக்கான குளோபல் வில்லேஜ் ஆறு மாதங்களுக்கு முன்பு அக்டோபர் 2023 இல் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது. தற்போது இது எதிர்வரும் ஏப்ரல் 28, 2024 அன்று மூடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த ஈத் விடுமுறையில் குளோபல் வில்லேஜில் உணவகங்கள், 195 க்கும் மேற்பட்ட சவாரிகள், விளையாட்டுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் வாராந்திர வாணவேடிக்கைக் காட்சிகள் போன்றவற்றை அனுபவிக்கலாம்.

டிக்கெட் விபரம்:

நீங்கள் டிக்கெட்டுகளை நேரடியாக கவுண்டரில் வாங்கலாம் ஆனால் குளோபல் வில்லேஜ் இணையதளம் – http://www.globalvillage.ae மூலம் ஆன்லைனில் வாங்கினால், உங்களுக்கு கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.

  • விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களுக்கான (Any Day) டிக்கெட் 30 திர்ஹம்ஸ் (27 திர்ஹம்ஸ் ஆன்லைனில்)
  • வார நாட்களில் மட்டும் அனுமதிக்கப்படும் (Week Day) டிக்கெட் 25 திர்ஹம்ஸ் (22.50 திர்ஹம்ஸ் ஆன்லைனில்)

நேரம்: தற்போது ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களில் மாலை 4 மணி முதல் அதிகாலை 2 மணி வரை பார்வையாளர்களுக்கு இங்கே அனுமதி உண்டு.

இடம்: குளோபல் வில்லேஜ் (ஷேக் முகமது பின் சையத் சாலை/E311 வழியாக அணுகலாம், எக்ஸிட் 37). மேலும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) குளோபல் வில்லேஜுக்கு பின்வரும் நேரடி பேருந்து சேவைகளை இயக்குகிறது:

  1. வழி 102 – ரஷிதியாவில் உள்ள அல் ரஷிதியா பேருந்து நிலையம் கேட் 5ல் இருந்து
  2. வழி 103 – தேராவில் உள்ள யூனியன் ஸ்கொயர் பேருந்து நிலையத்திலிருந்து
  3. வழி 104 – அல் ஃபாஹிதியில் உள்ள அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து
  4. வழி 106 – மால் ஆஃப் தி எமிரேட்ஸ் மெட்ரோ நிலையத்திலிருந்து
  5. வழி 107 – அல் நஹ்தாவிலிருந்து (சஹாரா மையத்திற்குப் பின்னால்)

2. துபாய் மிராக்கிள் கார்டன்

உலகின் மிகப்பெரிய இயற்கை மலர் தோட்டமான துபாய் மிராக்கிள் கார்டனின் 12வது சீசன் வருகின்ற ஜூன் 2, 2024 அன்று முடிவடைய உள்ளது.

டிக்கெட்டுகள்:

  • 12 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு 95 திர்ஹம்ஸ்
  • மூன்று முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு 80 திர்ஹம்.
  • மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளி நபர்களுக்கு இலவசம். அவர்களுக்கு துணையாக வரும் வயது வந்த ஒருவருக்கு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடியும் உண்டு.

நேரங்கள் – திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மற்றும் வார இறுதி நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை.

இடம் – துபாய் மிராக்கிள் கார்டன் அல் பர்ஷா தெற்கு, துபாய்லேண்ட் ஸ்ட்ரீட் 3, ஷேக் முகமது பின் சையத் சாலை (E311) மற்றும் உம் சுகீம் சாலை (D63) ஆகியவற்றின் சந்திப்பில் உள்ளது.

நீங்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி துபாய் மிராக்கிள் கார்டனுக்கு செல்ல  விரும்பினால், நீங்கள் முதலில் மெட்ரோவில் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் (MOE) மெட்ரோ நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து துபாய் மிராக்கிள் கார்டனுக்கு சேல்லும் பேருந்து வழித்தடம் 105 இல் செல்லலாம்.

3. துபாய் சஃபாரி பார்க்

துபாயின் பிரபலமான திறந்தவெளி உயிரியல் பூங்கா மே 31, 2024 அன்று மூடப்பட உள்ளது. இது 3,000 விலங்குகளுக்கு தாயகமாக உள்ளது. சுமார் 119 ஹெக்டேர் அதாவது 166 கால்பந்து மைதானங்களுக்குச் சமமான பரப்பளவைக் கொண்டுள்ள இந்த பூங்காவில் 10 வெவ்வேறு மாமிச உண்ணிகள், 50 வகையான ஊர்வன, 111 வகையான பறவைகள் மற்றும் 78 வகையான பாலூட்டிகள் உள்ளன.

பூங்காவின் இணையதளத்தின்படி, பார்வையாளர்கள் மே 31, 2024 வரை மட்டுமே இங்கு சென்று பார்வையிட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். எனவே, இங்கு சென்று பார்வையிட விரும்புபவர்கள் எஞ்சியிருக்கும் விடுமுறை நாட்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

டிக்கெட்டுகள்: துபாய் சஃபாரி பார்க் அதன் பார்வையாளர்களுக்கு பல்வேறு பேக்கேஜ் விருப்பங்களை வழங்குகின்றன.

  • பெரியவர்களுக்கு 50 திர்ஹம்ஸ்
  • மூன்று வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு 20 திர்ஹம்.

நேரங்கள் – ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும்

இடம்: அல் வர்கா 4 டிஸ்ட்ரிக்ட், E44 (ராஸ் அல் கோர் சாலை) க்கு வெளியே உள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!