துபாய் போலீசின் முக்கிய அறிவிப்பு!! சாலைகளில் நிறுத்திய கார்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்..!!

கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி அமீரகம் முழுவதும் பெய்த கனமழையால் பெரும்பாலான தெருக்களும் வீதிகளும் தண்ணீரில் மூழ்கியது. மேலும் துபாயின் ஷேக் சையத் சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் துபாயில் போக்குவரத்தும் பல மணி நேரங்களுக்கும் மேலாக துண்டிக்கப்பட்டது.
திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளத்தின் காரணாக பல வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதுடன், வெள்ளத்தில் மாட்டிக்கொண்டதால் வாகனங்களை தொடர்ந்து இயக்க முடியாமல் ஆங்காங்கே தங்களின் வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றனர். மேலும், மழைநீர் புகுந்ததால் சேதமடைந்த பல கார்களும் தெருக்களிலும் சாலைகளிலும் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், துபாயின் முக்கிய இடங்களில் சூழ்ந்திருந்த மழைநீர் அகற்றப்பட்டு தற்போது எமிரேட் முழுவதும் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், சாலைகள் மற்றும் தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை வேறு இடத்திற்கு மாற்றுமாறு வாகன ஓட்டிகளை துபாய் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக துபாய் காவல்துறை வெளியிட்டுள்ள X பதிவில், எமிரேட்டில் சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்வதற்காக வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நிறுத்திய தங்கள் வாகனங்களை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நெருக்கடியான இந்த சூழலில் ஆதரவு மற்றும் உதவியை எதிர்பார்ப்பவர்கள் துபாய் காவல்நிலையத்தின் அழைப்பு மையத்தை 901 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறை அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேசமயம், துபாய் சாலைகளில் காரின் நம்பர் பிளேட்டை தொலைத்தவர்கள் அவற்றை திரும்பப் பெறுவதற்கான தீர்வையும் RTA கொண்டு வந்துள்ளது. RTA வெளியிட்ட அறிவிப்பின் படி, வாகன ஓட்டிகள் தொலைந்து போன நம்பர் பிளேட்டை திரும்பப்பெற ஆணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த பிறகு, அவர்கள் நம்பர் பிளேட்டைப் பெற்றுக்கொள்ள பின்வரும் மையங்களில் ஏதேனும் ஒன்றை பார்வையிட வேண்டும் என்றும் RTA கூறியுள்ளது.
- ஷமில் அல் குசைஸ் (Shamil Al Qusais)
- AG கார்ஸ் அல் மம்சார் (AG Cars Al Mamzar)
- அல் முமாயாஸ் அஸ்வாக் மிஜர் (Al Mumayaz Aswaq Mizher)
- தஜ்தீத் (Tajdeed)
- தமாம் சென்டர் (Tamam centre)
- அல் முதகமேலா அல் அவிர் (Al Mutakamela Al Awir)
- அல் முதகமேலா அல் குஸ் (Al Mutakamela Al Quoz)
- அல் முமாயாஸ் பர்ஷா மால் (Al Mumayaz Barsha mall)
- வாசல் அல் ஜதாஃப் (Wasel Al Jaddaf)
#Attention | Dubai Police urges vehicle owners to promptly relocate their parked vehicles from the streets and roads. We thank all motorists for their cooperation in bolstering traffic safety and security. pic.twitter.com/336iOFadcW
— Dubai Policeشرطة دبي (@DubaiPoliceHQ) April 20, 2024
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel