அமீரக செய்திகள்

பயணிகளால் நிரம்பி வழியும் துபாய் விமான நிலையம்.. நிலைமையை சீராக்க உள்வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடு..!!

துபாய் விமான நிலையத்தில் இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த மழைக்கு பிறகு ஏற்பட்ட செயல்பாட்டு சவால்கள் காரணமாக விமானங்கள் தாமதம், விமானங்கள் திருப்பிவிடப்படுதல் போன்ற பல்வேறு இன்னல்களை சந்தித்தது. தற்பொழுது வரை இயல்பு நிலைக்கு திரும்பாத விமான நிலையத்தில் மழையின் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு நாட்களில் 1,200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) உள்வரும் விமானங்களின் எண்ணிக்கையை 48 மணிநேரத்திற்கு தற்காலிகமாக கட்டுப்படுத்துவதாக விமான நிலையம் அறிவித்துள்ளது. இருப்பினும், விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள் திட்டமிட்டபடி இயக்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதாவது, துபாய் விமான நிலையத்தில் செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்காக இன்று மதியம் 12 மணி முதல் 48 மணிநேரத்திற்கு உள்வரும் விமானங்களின் வரம்பை கட்டுப்படுத்துவதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் துபாயில் இருந்து புறப்படும் விமானங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் துபாய் ஏர்போர்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எமிரேட்ஸ் விமான நிறுவனம் மோசமான வானிலையிலிருந்து செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்காக இன்று (ஏப்ரல் 19) டிரான்சிட்டில் துபாய் வழியாக பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் செக்-இன் செய்வதை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

அதேபோல் Flydubai விமான நிறுவனமானது,  தற்பொழுது வரை விமான சேவைகளில் இடையூறு இருப்பதாகவும் இதனார் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன், பயணிகள் தங்கள் விமானத்தின் நிலையைச் சரிபார்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், ஏர் இந்தியா விமான நிறுவனம் துபாய் விமான நிலையத்தில் நீடிக்கும் இடையூறுகள் காரணமாக துபாய்க்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

அத்துடன் “செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியவுடன், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மீண்டும் விமான சேவைகளை விரைவில் வரங்குவதற்கான எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். ஏப்ரல் 21, 2024 வரை பயணத்திற்கான செல்லுபடியாகும் டிக்கெட்டுகளுடன் எங்கள் விமானங்களில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு, மறுபரிசீலனை (rescheduling) செய்வதில் ஒரு முறை விலக்கு அளிக்கப்படும் மற்றும் ரத்துசெய்வதற்கான முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம்” என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!