அமீரக செய்திகள்

அபுதாபி இந்து கோவிலுக்கு செல்ல முன்பதிவு செய்வது எப்படி? முன்பதிவு செய்யாதவர்களுக்கு அனுமதி மறுப்பு.!!

அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சமீபத்தில் திறக்கப்பட்ட BAPS இந்து கோவிலுக்கு வருகை தரும் பார்வையளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கணிசமாக அதிகரித்து வருவதால், கூட்டத்தை நிர்வகிக்கும் நோக்கில் கோவில் நிர்வாகம் புதிதாக ஆன்லைன் முன்பதிவு செயல்முறையை அறிமுகப்படுத்தியிருந்தது.

தற்போது, இந்த முன்பதிவு செயல்முறை செயலில் இருப்பதாகவும், கோவிலின் இணையதளத்தில் தங்கள் வருகையை பதிவு செய்யத் தவறும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமீரகத்தில் உள்ள தொழிலாளர்களும் தற்சமயம் ஈத் அல் பித்ருக்கு ஒரு வார கால விடுமுறையை அனுபவித்து வருகின்ற நிலையில், இந்த இந்து கோவிலானது பலருக்கு கூடுதல் ஓய்வு நேரத்தை செலவிடும் ஒரு பிரபலமான இடமாக உள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை புத்தாண்டு தினத்திற்கு சமமான உகாதி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் BAPS மந்திருக்கு வருகை புரிந்ததால் கோவிலில் பார்வையாளர்களின் கூட்டம் அலை மோதியுள்ளது.

மேலும், விஷு, தமிழ் புத்தாண்டு, பிஹு, ராமநவமி மற்றும் அனுமன் ஜெயந்தி போன்ற குறிப்பிடத்தக்க இந்து பண்டிகைகள் அடுத்த இரண்டு வாரங்களில் வரிசையாக வரவிருப்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், முன்பதிவு செயல்முறையை சீரமைக்கவும் கோவில் நிர்வாகம் தற்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

முன்பதிவு செயல்முறை:

1. அபுதாபியில் உள்ள BAPS இந்து கோவிலைப் பார்வையிட திட்டமிடுபவர்கள், கோவிலின் https://www.mandir.ae/visit என்ற இணையதளத்தின் மூலம் முன்கூட்டியே வருகையை பதிவு செய்ய வேண்டும்.

2. இணையதளத்தில் உள்நுழைந்ததும் முன்பதிவு பக்கத்தில், பயனர்கள் தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, நாடு மற்றும் வசிக்கும் நகரம் போன்ற விபரங்களை உள்ளிட வேண்டும்.

3. மேலும், வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு பயணத்திற்கான விருப்பமான தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

4. அடுத்ததாக, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு OTP அனுப்பப்படும். அந்த OTPயை உள்ளிட்டதும் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த பயனருக்கு மற்றொரு மின்னஞ்சல் அனுப்பப்படும்.

5. அதேபோன்று, 10 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு முன்பதிவு செய்ய வேண்டுமெனில், இணையதளத்தில் ஒரு தனி பதிவு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளின் முதல் கோவிலான இந்த BAPS இந்து கோவில் செவ்வாய்கிழமை முதல் ஞாயிற்றுகிழமை வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்காகவும், பார்வையாளர்களுக்காகவும் திறந்திருக்கும். மேலும் இந்த கோவில் திங்கட்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!